சீன, பாக் ஆயுத இறக்குமதி: ரத்து செய்த இலங்கை
கொழும்பு: சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் முடிவை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.
ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று கூட்டுப் படைத் தலைவராக பதவியேற்றுள்ள சரத் பொன்சேகா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஈழப் போர் முடிவடைந்து விட்டதால், பாகிஸ்தான், சீனாவிடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் முடிவு ரத்து செய்யப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதால் கனரக ஆயுதங்கள் இனி தேவைப்படாது என்பதால் சீன ஆயுதக் கொள்முதல் ரத்து செய்யப்படுகிறது.
2009ம் ஆண்டு பாதுகாப்பு செலவீனமாக 200 பில்லியன் திட்டமிடப்பட்டது. இது நாட்டின் மொத்த செலவீனத்தி்ல 17 சதவீதமாகும்.
3.50 லட்சம் பேரைக் கொண்ட இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டு செயல்பாட்டால், ஆசியாவின் மிக நீண்ட போர்களில் ஒன்று மே 19ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் 800 வீரர்கள் ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
500 இந்திய வீரர்கள் வருகை...
மேலும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 500 பேரைக் கொண்ட இந்திய ராணுவக் குழு வரவுள்ளதாகவும் பொன்சேகா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானது ஒன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
இந்தப் பணியில் எங்களுக்கு உதவுவதற்கு இந்தியப் ராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் இங்கு வரவுள்ளனர்.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் உதவிகள் அவசியமானவை.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்ததைவிட அரசுப் படையினர் பத்து மடங்கு அதிகமாகச் செய்துள்ளனர். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் படையில் உள்ள அனைத்து கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications