தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வி
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6 முதலே கம்ப்யூட்டர் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
2009-10ம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கணினி பாடப் புத்தகம் வழங்கப்படும். இத்திட்டம் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்கும் வகையில் இந்தக் கல்வியாண்டில் 75 ஆங்கில சிறுகதைப் புத்தகங்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
12 மாவட்டங்களில் உள்ள பெண் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில் தலா ரூ.42.50 லட்சம் செலவில் 100 மாணவியர்களுக்கான இலவச தங்கும் விடுதி மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டித் தரப்படவுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவிகள் தங்கள் கல்வியை இடையில் நிறுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கவும் 9ம் வகுப்பு பயிலும் 16 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு அவர்கள் பெயரில் ரூ.3,000 வங்கியில் வைப்பீடு செய்யும் திட்டம் இக்கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
தமிழ்ப் பாடம் இல்லாவிட்டால் நடவடிக்கை:
மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக ஆரம்பித்து 10ம் வகுப்பு வரை தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்க அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி, 1 முதல் 4-ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி கற்றுக் கொடுக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications