சத்துணவு ஊழியர்களை கருணாநிதி மிரட்டுவதா?-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்களை மிரட்டாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டிலிருந்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1982ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் கொண்டு வரப்பட்ட திட்டம் சத்துணவுத் திட்டம். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருமை அதிமுகவையே சாரும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று அறிவித்தால், "போட்டி உண்ணாவிரதம் இருக்க எனக்கும் தெரியும்'' என்று அவர்களை மிரட்டும் பாணியில் முதல்வர் கருணாநிதி பேசியதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, சத்துணவு ஊழியர்களுக்கு 1998ம் ஆண்டு ஊதிய உயர்வு அளித்ததாகவும், பின்னர் தற்போது ஊதிய உயர்வு அளித்துள்ளதாகவும், ஆனால் இடையில் வந்த ஆட்சியில் எந்த ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

1998 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கும் தமிழ்நாட்டில் அது விரிவுபடுத்தப்பட்டது. யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த ஊதிய உயர்வை அளித்திருப்பார்கள்.

ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் 2005ம் ஆண்டு அங்கன்வாடி உதவியாளர் நிலை1 மற்றும் மதிய உணவுத் திட்ட சமையல்காரர்கள் ஆகியோருக்கு கூடுதல் மதிப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு 330 ரூபாயும், அங்கன்வாடி உதவியாளர் நிலை2 மற்றும் சத்துணவுக் கூட உதவியாளர்கள் ஆகியோருக்கு கூடுதல் மதிப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு 290 ரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும் வரையறுக்கப்படாத ஊதிய வீதங்களில் ஊதியம் பெறும் அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும்போது ஒட்டுமொத்தத் தொகையாக 50,000 ரூபாய் அளிக்கவும், மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்தத் தொகையாக 20,000 ரூபாய் அளிக்கவும் ஆணையிடப்பட்டது.

இது மட்டும் அல்லாமல், சிறப்பு வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பு 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மேலும் அடிப்படை ஊதியத்தின் 50 விழுக்காடு அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து எனது ஆட்சியில் 1.1.2006 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கியபோது அது சத்துணவுப் பணியாளர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தையும் மறைத்து, அதிமுக ஆட்சியில் சத்துணவு ஊழியர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்று கருணாநிதி அறிவித்து இருப்பது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை மிரட்டுவது, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ஆகியவற்றை விட்டுவிட்டு சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+