நண்பரிடம் ரூ. 50 லட்சம் திருடிய டிராவல்ஸ் அதிபர்
திருச்சி: காரில் வைத்திருந்த ரூ. 50 லட்சம் பணம் மாயமான வழக்கில் டிராவல்ஸ் அதிபர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் உள்ள அய்லு தெருவில் வசித்து வருபவர் மகாராஜா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தனது நண்பர்கள் வக்கீல் மதன்குமார் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் சென்னைக்கு காரில் சென்றார்.
திருச்சிக்கு வந்த அவர்கள் ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சாப்பிடுவதற்காக காரை நிறுத்தினர். மகாராஜா தான் கொண்டு வந்த ரூ.50 லட்சம் பணத்தை காரில் வைத்து விட்டு மற்றவர்களுடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த ரூ.50 லட்சம் பணத்தை காணவில்லை. அதை யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மகாராஜா கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராவல்ஸ் நிறுவனஅதிபர் முத்துக்குமார், ஜேம்ஸ், கிறிஸ்டோபர் மற்றும் ராபர்ட் ஆகியோர் ரூ.36 லட்சம் ரொக்க பணத்துடன் தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள்தான் ம்காராஜாவின் பணத்தைத் திருடியது தெரிய வந்தது.
மகாராஜா நிலம் விற்ற பணம் ரூ.50 லட்சத்தை சென்னைக்கு கொண்டு செல்வது அவருடைய நண்பரான முத்துக்குமாருக்கு தெரியவந்தது. அந்த பணத்தை திருட முத்துக்குமார் திட்டம் போட்டார். இந்த திட்டம் குறித்து சென்னையை சேர்ந்த அவருடைய நண்பர்கள் ராபர்ட், கணபதி ஆகியோருக்கு போனில் தெரிவித்தார். சென்னைக்கு கொண்டும் செல்லும் வழியில் திருச்சியில் அந்த பணத்தை திருட முடிவு செய்தனர்.
அதனால் முத்துக்குமார், மகாராஜா, வக்கீல் மதன்குமார் ஆகியோர் சென்ற காரை ஜேம்ஸ், ராபர்ட், கணபதி ஆகியோர் மற்றொரு காரில் ரகசியமாக பின் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் பணம் இருந்த காரில் இருந்து கொண்டு எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்ற விவரத்தை முத்துக்குமார் போனில் அவர்களுக்கு தெரிவித்து கொண்டே வந்துள்ளார்.
மகாராஜாவும், மற்றவர்களும் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றனர். இந்த விவரத்தை முத்துக்குமார் செல்போனில் ராபர்ட்டுக்கு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஜேம்ஸ், கணபதி, ராபர்ட் ஆகிய 3 பேரும் முத்துக்குமார் கார் நின்ற இடத்திற்கு வந்தனர். கார் கதவை போலிச்சாவி போட்டு திறந்து, காருக்குள் இருந்த ரூ.50 லட்சத்தை திருடி கொண்டு தயாராக இருந்த காரில் ஏறி தப்பி விட்டனர்.
மகாராஜா பணத்தை காணாது திகைத்தார். அருகில் இருந்த முத்துகுமாரும் அதிர்ச்சியானது போல் நடித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முத்துக்குமார், ராபர்ட், கணபதி, ஜேம்ஸ் ஆகியோரிடம் இருந்து ரூ.36 லட்சத்து 31 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மீதப் பணத்தையும் பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
