சட்ட மாணவர்கள் மோதல்-3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் ஜாதிரீதியாக இரு தரப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் மூன்று மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய போலீஸ் கமிஷனர் சேகர் மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கத் தேவையானவற்றைப் பரிந்துரைக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் தனது அறிக்கையை சமீபத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அளித்தது. இந்த அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
கமிஷன் அறிக்கையில், சம்பவத்துக்கு 3 போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும், அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்ததால் தான் அந்தச் சம்பவம் நடந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றும், கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் பரி்ந்துரை செய்யப்பட்டுள்ளது
நீதிபதி சண்முகம் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..
சட்டகல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் துரதிர்ஷ்டவசமானது. அதிலும் பல மாணவர்கள் காட்டுமிராண்டிதனமாக கீழே விழுந்து கிடந்த இருவரை விடாமல் அடித்ததைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நெற்கதிரை அடிப்பது போல..
இந்தத் தாக்குதல் அழுக்கு துணியை கல்லில் அடித்து துவைத்தது போலவும், நெற்கதிரை அடிப்பது போலவும் இருந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த உதவி கமிஷனர் நாராயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சேகர்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் தாக்குதலை தடுக்கவும், காயமுற்ற மாணவர்களை மீட்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் சலனமே இன்றி பார்த்து கொண்டிருந்தனர்.
கெல்லீஸ் சட்டக் கல்லூரி விடுதியில் இருந்து சுமார் 40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தும், மதியம் இரண்டரை மணிக்கு எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் வழியாக கதவை உடைத்து மாணவர்கள் உள்ளே நுழைந்தபோதும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுக்கவில்லை.
தேர்வு எழுதும் மாணவர்களை அடிக்கும் நோக்கத்துடன் குழுமிய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற மதியம் 3 மணிக்கு கல்லூரி முதல்வர் கொடுத்த எழுத்துப்பூர்வமான கோரிக்கையும் போலீசாரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
போன் மூலம் மதியம் 3 மணிக்கு விடுத்த வேண்டுகோளும், மதியம் நாலரை மணிக்கு வக்கீல் ஜெரால்டு போலீஸ் உதவி கமிஷனரை நேரில் சந்தித்து கொடுத்த வேண்டுகோளும் செவி சாய்க்கப்படவில்லை.
10 நிமிடங்களுக்கு முன்பே போலீசார் தலையிட்டு இருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது.
மாலை 4.40 மணிக்குத்தான் எழுத்து மூலம் வேண்டுகோள் விதிக்கப்பட்டதாகவும், கல்லூரியின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கல்லூரி முதல்வர் உறுதி அளித்ததாகவும், போலீஸ் தரப்பில் கூறியது உண்மை அல்ல.
உதவி கமிஷனர் கூறிய தவறான தகவல்...
கல்லூரி முதல்வர் போலீசாரை கல்லூரிக்குள் நுழைய வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் கல்லூரியில் அமைதி நிலவுவதாகவும் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் கூறியிருப்பது தவறான தகவல்.
ஆயுதம் தாங்கிய மாணவர்களை தடுக்க இந்த அதிகாரிகள் தவறி விட்டனர். கல்லூரி வளாகத்துக்குள் நுழையாமலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சுமார் 2 மணி நேரம் சட்டக்கல்லூரி வாசலில் நின்றிருந்த உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரின் செயலின்மை, தவறு காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் செய்துள்ளார். போலீசுக்கும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார்.
3 அதிகாரிகள் மீது நடவடிக்கை ...
கல்லூரி முதல்வர் இதில் சரியாகவே செயல்பட்டுள்ளார். காவல்துறை சார்பில் தவறு செய்த உதவி கமிஷ்னர் நாராயணமூர்த்தி, எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் சேகர்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் மீது துறைரீதியி்ல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரியை 3 ஆக பிரிக்க வேண்டும்...
வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னையில் 3 மருத்துவ கல்லூரிகள் இருப்பது போல சட்டக் கல்லூரியை பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும்.
கெல்லீஸ் மாணவர் விடுதியை சட்ட மேற்படிப்பு மாணவர் இல்லமாக பயன்படுத்தலாம், மாணவர்கள் பிரச்சினையை கண்டறிய பேராசரியர்கள் அடங்கிய நிலையான குழு அமைக்க வேண்டும்.
ஜாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும்...
ஜாதி அடிப்படையிலான சங்கங்கள் கல்லூரியிலோ, அல்லது மாணவர் விடுதியிலோ இருப்பதை தடை செய்ய வேண்டும். மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால் மோதல்களைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டு்ள்ளது.
கமிஷனின் பரி்ந்துரையை ஏற்று முதல்கட்டமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications