புறக்கணிப்பு குறித்து விளக்க ராமதாஸ், வைகோவுடன் சேர்ந்து பொதுக் கூட்டம் - ஜெ. திட்டம்

சட்டசபை இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகபட்ச லாபத்தைப் பெறும் வகையில் தீவிர பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன.
மறுபக்கம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 'ஒண்டி'யாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. திமுக இருக்கும் தைரியத்தில் காங்கிரஸ் கட்சி நிதானமாக வேலைகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளது.
தற்போதைய இடைத் தேர்தல் களத்தில் அதிமுக, பாமக, மதிமுக மட்டும் ஒதுங்கியுள்ளன.
இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக இந்த மூன்று கட்சிகளும் அறிவித்து அதன்படியே ஒதுங்கியுள்ளன. இந்த நிலையில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது ஏன் என்று மக்களிடம் நேரடியாக விளக்க ஜெயலலிதா யோசித்து வருவதாக தெரிகிறது.
அதற்காக அவர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும் அவர் யோசித்து வருகிறார். மேலும், ஒரு தொகுதியில், தானும், டாக்டர் ராமதாஸ், வைகோவும் இணைந்து பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தைக் கூட்டவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தக் கூட்டம் தொண்டாமுத்தூரில் நடக்கக் கூடும் என பேசப்படுகிறது.
அதேசமயம், மற்ற தொகுதிகளில் இந்தக் கட்சிகளின் 2ம் நிலை தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் நடைபெறுமாம்.
தேர்தல் முடியும் வரை தேர்தல் புறக்கணிப்பு ஏன் என்பது குறித்த விளக்கக் கூட்டங்களை ஐந்து தொகுதிகளிலும் நடத்தப் போகிறார்களாம்.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications