கூடுதல் ஓட்டுக்களை பெற்றுத் தரும் திமுக செயலாளருக்கு 25 பவுன் சங்கிலி - அழகிரி பரிசு
கம்பம்: தென் மாவட்டங்களில் உள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளில் எந்த தொகுதியில் கூடுதல் வாக்குகளை திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெறுகிறார்களோ அந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கு 25 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக தருவேன் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி.
கம்பம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் கம்பம் நகரில் நடராஜன் நினைவு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இந்த தேர்தலில் அ.தி.மு.க. நிற்கவில்லை என்று அறிவித்துவிட்டு கோடநாட்டில் கட்சி பொது செயலாளர் ஓய்வெடுக்கிறார்.
கம்பம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் 60 ஆயிரம் வரை கூடுதல் ஓட்டுகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை வெற்றி பெறச் செய்ய கட்சியினர் பாடுபடவேண்டும்.
ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க. தொண்டர்களை எப்படி ஓட்டுப்போட வைப்பது என்ற தந்திரம் எங்களுக்கு தெரியும் என்றேன்.
உடனே அந்த அம்மா பத்திரிகைகள் மூலமாக அந்த தந்திரம் என்ன என்று விளக்கம் கேட்கிறார். தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் சாதனைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது தான் அந்த தந்திரம். வேறு என்ன தந்திரம் இருக்கிறது.
தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகளும் எனது பொறுப்பில் உள்ளன. இந்த 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் பெற்று தரும் தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு எனது சொந்த செலவில், முதல்-அமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த டாலருடன் கூடிய 25 பவுன் தங்க சங்கிலியை பரிசாக வழங்குவேன்.
பகுதி அளவில் கூடுதல் ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு பெற்று தருபவருக்கு 10 பவுன் தங்க சங்கிலி பரிசாக எனது சொந்த செலவில் வழங்கிட உள்ளேன் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications