சத்துணவு பணியாளர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை
சென்னை: பிறரின் தூண்டுதலால் சத்துணவு பணியாளர்கள் போராட்டம் நடத்துவது நியாயமா. இதை மக்களே முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுகுறித்து பெங்களூரிலிருந்தபடி கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
கேள்வி: ஆகஸ்டு 7ம் தேதியன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதே?.
பதில்: நானும் அந்த செய்தியைப் பார்த்தேன். பேரணி நடத்த உள்ள நாளான 7ம் தேதியன்று அனைத்து சத்துணவு மையங்களும் உரிய பணியாளர்களுடன் செயல்படவும், பள்ளி சத்துணவு மாணவிகளுக்கு தங்கு தடையின்றி சத்துணவு வழங்கவும் -அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கி, சத்துணவு மைய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
14.7.2009 அன்று அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர், சூரியமூர்த்தி விடுத்த அறிக்கையில், குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வந்த 2 லட்சத்து 25 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார்.
இதற்கு மாசு கற்பிக்க நடத்தப்படும் போராட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் கலந்து கொள்ளாது என்றும், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க மாநாடு நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் செயலாக்கத்தில் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து- சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த 3.8.2009 அன்று, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடியிருக்கிறார். அப்போது பல்வேறு சங்க பிரதிநிதிகள் சில பிரச்சினைகள் குறித்து அளித்த மனுக்களை ஏற்றுக்கொண்டு, அவற்றின் மீது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருக்கிறார்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு இந்த அரசு பதவியேற்ற பின்னர் 3 முறை ஊதிய விகிதத்தில் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் நிலை-1 மற்றும் நிலை-2 ஆகியோர்களுக்கு தொகுப்பூதியத்திற்கு பதிலாக சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
1.6.2009 முதல் அனைத்து சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மாதாந்திர ஊதியம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், அந்த சங்கத்தின் சார்பில் பழனிநாதன் திமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கவும், எனக்கு பாராட்டு தெரிவிக்கவும் மாநாடு நடத்த தேதி கேட்டு பலமுறை என்னை சந்தித்திருக்கிறார். நான் சட்டமன்றத்திலே இந்த பிரச்சினை குறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறேன்.
இவ்வளவிற்கும் பிறகு, அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், அது நியாயம்தானா என்பதை பொதுமக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன். "குட்டக் குட்ட குனிவதும்'', "குனியக் குனியக் குட்டுவதும்'' என்று ஒரு பழமொழி உண்டு.
நூற்றுக்கு 90 சதவீத பணியாளர்கள் திருப்தியோடு பணியாற்றி கொண்டிருக்கும் நேரத்தில், அதிலே ஒரு 10 சதவீதத்தினர் பிறரின் தூண்டுதலோடு இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களை எல்லாம் வேறு பணியிலே சேர்ந்து அதிக ஊதியம் பெற அனுமதித்துவிட்டு, இந்த ஊதியத்திலே திருப்தியடைய தமிழகத்திலே ஏராளமானவர்கள் காத்திருக்கும்போது, அவர்களை அந்த பணியிலே அமர்த்துவது பற்றி அரசு ஆலோசிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் எழுதியுள்ள கட்டுரையில், "மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் பெரும்பாலும் அறிவிப்புகளாகவே முடிந்து விடுகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை இல்லை'' என்று சொல்லியிருக்கிறாரே?.
பதில்: 6.8.2009 தேதிய முரசொலி நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு அரசு செய்துள்ள சாதனைகளில் ஒருசிலவற்றை மட்டும் தொகுத்து எழுதியிருக்கிறேன். அத்தனை சலுகைகளையும் வரதராஜன் பார்த்தாரா, பார்க்கவில்லையா? அல்லது பார்த்த பிறகுதான் அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே இருக்கின்றன என்று எழுதியிருக்கிறாரா?
அறிவிப்புகள், அறிவிப்புகளாகவே இருக்கின்றன என்று கூறும் வரதராஜன் விளக்கம் பெற இதோ ஒரு புள்ளி விவரம்.
30.6.2009 தேதிய நிலவரப்படி, 2006-ம் ஆண்டு முதல் இதுவரை கவர்னர் உரைகளில், நிதி நிலை அறிக்கைகளில், பேரவை தொடர்கூட்டத்தில் செய்யப்பட்ட மொத்த அறிவிப்புகள் 706 - இந்த அறிவிப்புகளின் மீது ஆணை வெளியிடப்பட்டு பணிகள் முடிவுற்றவை 489 - ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருபவை 87. எனவே தமிழக அரசைப் பொறுத்தவரையில் அறிவிப்புகள், அறிவிப்புகளாகவே இருந்துவிடவில்லை, வரதராஜன் இனியாவது உணர்வார் என்று நம்புகிறேன்.
கேள்வி: ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் திருமங்கலம் பார்முலா அடிப்படையிலேயே இந்த இடைத்தேர்தலையும் சந்திக்கிறார்கள், அதிகார துஷ்பிரயோகம், பண விநியோகம் என வழக்கமான முறையிலேயே செயல்படுகிறார்கள் என்ற வரதராஜனின் கூற்று பற்றி?
பதில்: திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு, அதே மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலின்போது - தி.மு.க.வுடன் தோழமையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் அங்கே தேர்தல் பிரசாரத்தில் என்னுடன் இணைந்து ஈடுபட்டார்.
அதே பாணியில்தான் அடுத்த இடைத்தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் வரதராஜனுக்கு மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தெரியாத அதிகார துஷ்பிரயோகம், பண விநியோகம் எல்லாம் தற்போது தெரிகின்றன என்றால் அதற்கு காரணம் தற்போது நாங்கள் அவர்களோடு தோழமை அணியிலே இல்லை என்பதுதானே தவிர வேறல்ல.
திருமங்கலம் தொகுதியில் பண விநியோகம் நடைபெற்றதாக தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியினர் சொல்லி வருகிறார்கள். 2008-ம் ஆண்டு டிசம்பரில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தபோது, பொதுமக்களே அவர்களை மடக்கி, பணத்தையும் அதைக்கொண்டு வந்த 3 பேரையும் போலீஸ் துறையினரிடம் கையும், களவுமாக ஒப்படைத்தார்களே, அதைச் சொல்லுகிறார்களோ என்னவோ?
கேள்வி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் கிராம விவசாயிகள் சிலர் 120 ஆண்டுகளாக அனுபவித்து வந்த 915 ஏக்கர் நிலத்தை சிலர் சட்டவிரோதமாக சில அதிகாரிகளின் உதவியோடு பட்டா பெற்றுள்ளதாக கூறி, நல்லக்கண்ணு போராட்டம் நடத்தியதாக "தீக்கதிர்'' நாளேட்டில் பெரிய அளவில் செய்தி வந்துள்ளதே?
பதில்: அந்த போராட்டத்தின் முடிவு என்ன? போராட்டம் நடைபெற்ற இடத்திற்கே அரசு அதிகாரி நேரில் வந்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் பிறகு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டதாகவும், நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கே கோட்டாட்சியர் நேராக வந்து இந்த அறிவிப்பினைச் செய்ததாகவும் அதே நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதில் இருந்தே, தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
எதிலும் பிடிவாதமாக இருந்து மக்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், உண்மையை விசாரித்தறிந்து தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பது பாராட்டுக்குரிய செய்திதானே!
கேள்வி: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களே?.
பதில்: விசைத்தறியாளர் பிரச்சினை குறித்து, கைத்தறித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கூறப்பட்டு - அவர் கோவை மாவட்ட அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியுடன் தொடர்பு கொண்டு, கோவை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்- வேலை நிறுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணியிலே ஈடுபட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு ஏற்படாவிட்டாலும், தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசைத்தறி பிரச்சினையில் ஒரு சுமூக முடிவு ஏற்படும் என்று நம்புகிறேன்.
கேள்வி: அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா, இந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் யாரும் வாக்களிக்க கூடாது என்றும் - முழு புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றும் கண்டிப்பாக சொல்லியிருப்பதால் அந்த கட்சியினர் வாக்களிக்க மாட்டார்களா?
பதில்: 2007-ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, அந்த தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., தெலுங்குதேசம், சமாஜ்வாடி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்குமே வாக்களிக்காது என்று ஜெயலலிதா அறிவித்தார்.
14.7.2007 அன்று டெல்லியில் நடைபெற்ற அந்த கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, "குடியரசு தலைவர் தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரையோ, தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளரையோ ஆதரிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் குடியரசு தலைவர் தேர்தலில் எங்கள் அணி வாக்களிக்காது'' என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? குடியரசு தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக அ.தி.மு.க., ம.தி.மு.க., சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து வாக்களித்தார். ஆனால் ஜெயலலிதா மட்டும் வாக்களிக்கவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அந்த 3-வது அணியைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் வெட்கி தலை குனிந்தனர்.
பத்திரிகைகள் எல்லாம் இந்த பம்மாத்து வேலை பற்றி பக்கம் பக்கமாக எழுதின. அப்போது ஜெயலலிதா, அவர் சொல்லி அ.தி.மு.க.வினர் வாக்களிக்கவில்லை என்று ஒரு பதிலைக் கூறினார். அப்படி என்றால், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கும் போது, அதை மீறி அத்தனை உறுப்பினர்களும் வந்து வாக்களித்து விட்டார்களா என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மையார் பதிலே கூறவில்லை.
இப்படிப்பட்ட முன்னுதாரணம் படைத்த தலைவிதான் இப்போதும் தேர்தல் புறக்கணிப்பு பற்றி அறிவித்திருக்கிறார்!
கேள்வி: தே.மு.தி.க. தலைவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் - ஆளுங்கட்சியோடு நெருக்கமான ஒருவர் - தனது மருத்துவமனையின் அனைத்து அறைகளிலும் அரசாங்கத்தின் இலவச கலர் டி.வி.யை வைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?.
பதில்: எந்த மருத்துவமனை என்று அவர் சொல்வாரானால், அதைப்பற்றி உரிய விசாரணை நடத்த அரசு தயாராக இருக்கிறது. அந்த பேட்டியில் சட்டசபைக்கு அவர் ஏன் வரவில்லை என்று நான் கேட்டதாக கூடச் சொல்லியிருக்கிறார். அவர் சட்டசபைக்கு வருவதைப் பற்றியோ, வராததைப் பற்றியோ நான் என்றைக்கும் கேட்டதில்லை என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications