இலங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒப்படைப்பு
கொழும்பு: ஈழ தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பல மாத இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஐரோப்பிய தமிழர்கள், ஈழத்தில் அகதிகள் முகாமில் உண்ண உணவின்றி வாடும் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் அந்த நிவாரண பொருட்கள் 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, கொலராடோ என்ற சரக்கு கப்பலில் இலங்கைக்கு கடந்த மாதம் 7ம் தேதி அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிய நிலையிலும் அது செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அந்த கப்பலை அனுமதிக்க உரிய ஆவணங்கள் இல்லை என கூறி கொழும்பு அதிகாரிகள் முட்டுகட்டை போட்டு வந்தனர்.
தற்போது அவர்கள் கேட்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டதை அடுத்த அப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
அந்த நிவாரண பொருட்களை இலங்கை சுகாதார அமைச்சகமும், தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் சோதனையிட்ட பின்னரே அவை வன்னி முகாம்களுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரி சுகின் பிரின்ஸ் கூறுகையில், நிவாரண பொருட்கள் இந்த வாரத்துக்குள் முகாம்களில் வாடும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications