தேர்தலை கண்டு ஓடி, ஒளிய மாட்டோம்-கனிமொழி
கோவை: இரண்டு தேர்தலில் தோற்ற சிலர் தேர்தலை சந்திக்காமல் ஓடி, ஒளிகிறார்கள். திமுக ஒருபோதும் தேர்தலை புறக்கணித்தது கிடையாது என திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவி்த்துள்ளார்.
தொண்டாமுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து வீர கேரளத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி பேசுகையில்,
திமுக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும், மக்கள் மீது மரியாதை கொண்டுள்ளது. தமிழக மக்கள் நலனுக்காகவே திட்டங்களை செயல்படுத்தி, மக்களுக்காகவே தலைவர் கலைஞர் வாழ்கிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சிலர், இந்த தேர்தல் சரியா? என்று கேட்கிறார்கள்.
திமுக தேர்தலில் தோல்வியை சந்தித்த போதும், தலைவர் கலைஞர் ஒருபோதும் தேர்தலை புறக்கணிக்கவில்லை. ஆனால் 2 தேர்தலில் தோல்வியை தழுவியதற்காக சிலர் தேர்தலை சந்திக்காமல் ஓடி, ஒளிகிறார்கள்.
பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் இல்லை...
தமிழ்நாட்டுக்கு 75 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ. 12 ஆயிரம் கடன் சுமை இருப்பதாக சொல்கிறார்கள். பட்ஜெட் என்றால் பற்றாக்குறை மற்றும் கடன் இருக்கத்தான் செய்யும், இந்திய பட்ஜெட்டும் அப்படித்தான்.
அமெரிக்கா தாக்கல் செய்த பட்ஜெட்டும் கடன் பட்ஜெட்டுதான். கடன் எதற்காக? படத்தை இயக்கி, வெளியிடுவதற்காகவா? இல்லை. மக்களுக்காகத்தான். தமிழகத்தில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்படும் காலம் முதல் தொடர்ந்து கடன் சுமை இருந்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சி நடத்தியபோதும் இந்த கடன் சுமை சேர்ந்துள்ளது.
இலவச திட்டம் அல்ல, மக்களின் உரிமை...
இப்போது 1 கோடி மக்களுக்காக காப்பீட்டு திட்டத்தை தலைவர் கலைஞர் செயல்படுத்தி உள்ளார். இதை இலவச திட்டங்கள் என்று கூறுவது தவறு . மக்களின் உரிமைகளை திமுக அரசு வழங்கி வருகிறது என்றார் கனிமொழி.


Click it and Unblock the Notifications
