For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் ஜாகதத்தைக் கணிக்கும் இடத்தில் திமுக - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அரசியலில் இனி யாரும் திமுகவைப் புறக்கணிக்க முடியாது. இந்தியாவின் ஜாகதத்தைக் கணிக்கக் கூடியத்தை இடத்தை திமுக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திமுகவுக்குத் தாவிக் கொண்டுள்ளனர். இவர்கள் அணி அணியாக வந்து திமுகவில் இணையும் விழாவால், அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்படுகிறது.

நேற்று முன்தினம் அதிமுகவிலிருந்து டைவ் அடித்த அனிதா ராதாகிருஷணன் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். நேற்று திமுகவிலிருந்து மதிமுகவுக்குப் போய் மறுபடியும் திமுகவுக்கு வந்து பின்னர் மீண்டும் மதிமுகவுக்குப் போய் இப்போது மீண்டும் திமுகவுக்குத் திரும்பிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குரூப் திமுகவில் இணையும் விழா நடந்தது.

முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், கருணாநிதி பேசுகையில்,

எனக்கு எப்போதும் அலைச்சலிலே தான் உடல் நலிவு ஏற்படும். இப்போது பெங்களூர் சென்று ஒன்பது நாள் ஓய்வெடுத்துக் கொண்டு திரும்பியபிறகு, ஓய்வின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டு இருக்கின்றது.

உடல் நிலை பாதிப்பின் காரணமாக மருத்துவர்களை அழைத்து, அவர்களிடத்திலே உடல் நிலை பற்றி கூறி அவர்கள் தடுத்தும் கேளாமல், இந்த நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்தாலும் - கலந்து கொள்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

தம்பி ராதாகிருஷ்ணனே, சென்று திரும்புகிற நேரத்தில் சற்று தாமதமாகத்தான் திரும்பியிருக்கிறார் என்ற காரணத்தால் - தாமதமாக திரும்பியவர்களை, தாமதமாக வந்து வரவேற்பதில் தவறில்லை.

நேற்றைக்கு ஒரு ராதா -இன்று இந்த ராதா...

வேடிக்கை என்னவென்றால் நேற்றைக்கு ஒரு "ராதா கிருஷ்ணன்'' வந்து சேர்ந்தார். அனிதா ராதாகிருஷ்ணன். இன்றைக்கு இந்த "ராதா கிருஷ்ணன்'' வந்து சேர்ந்திருக்கிறார். அவர் தி.மு.கழகத்தில் இருந்து முதலிலே வெளியேறியவர்களோடு வெளியேறி, மீண்டும் இணைந்து - இன்றைக்கு மீண்டும் தன்னை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் - நான் அவருக்கு சொல்லிக் கொள்கிறேன் - யாராவது கேட்பார்கள், தி.மு.கழகத்தில் இருந்து வெளியேறுவது - மறுபடியும் தி.மு.க.விற்கு வருவது - இப்படியே மறுபடியும் தி.மு.க.வை விட்டுப் போவீர்களா என்று யாராவது கேட்டால், நான் அவருக்கும் சொல்வேன், எனக்கும் சொல்லிக் கொள்வேன்.

தண்ணீரிலே கூட மூன்று முறை தான் முழுகுவார்கள் - மூன்றாவது முழுக்குக்கு பிறகு தண்ணீரோடு கலந்து விடுவார்கள். அதைப்போல இப்போது ராதாகிருஷ்ணன் மூழ்கியிருப்பது - மூன்றாவது முழுக்கு - தி.மு.கழகத்தோடு இணைந்து இதோடு கலந்து விட்ட முழுக்கு என்பதை சொல்கிற நேரத்திலே வேறுவிதமாக தோன்றினாலும் உண்மை இது தான். ஏனென்றால், அக்கரை எப்படி இருக்கும் என்பதைப் போய் பார்த்து விட்டு வந்து மீண்டும் திராவிடர்கள் உய்ய-திராவிட சமுதாயம் வாழ-உள்ளபடியே திராவிடச்சமுதாயம் மறுமலர்ச்சி பெற திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டால் வேறு வழி இல்லை என்பதை இன்றைக்கு உணர்ந்து கொண்டிருக்கிற தம்பி ராதாகிருஷ்ணனை நான் மனமார வரவேற்கின்றேன்.

தி.மு.கழகம் இன்றைய தினம் நேற்றைக்கு நான் இங்கே குறிப்பிட்டதை போல ஒரு மாநிலக்கட்சி என்ற அளவிலே மாத்திரம் அல்லாமல், மாநிலம் தாண்டி, இன்றைக்கு மங்காப்புகழ் பெற்று வருகின்ற ஒரு இயக்கம் என்பதற்கு அடையாளமாகத்தான் 18 ஆண்டுகள் காலமாக திருவள்ளுவரையே ஏற்றுக்கொள்ளாத கர்நாடக மாநிலத்தில்-சபதம் செய்து- ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்று அதிகார தோரணையிலே கேட்டல்ல-அன்பால் தொடர்பு கொண்டு, அங்குள்ளவர்களுக்கும் திருவள்ளுவர் யார் என்பதை விளக்கி-அங்குள்ளவர்களுக்கும் திருவள்ளுவரை உணர செய்து-அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியே தலைமை தாங்கி திருவள்ளுவரின் சிலையை 18 ஆண்டு காலம் ஒரு கந்தல் துணி கொண்டு மூடப்பட்டிருந்த சிலையை நேற்றைக்கு முன் தினம் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியை அங்கே நடத்தினார்கள் என்றால், திருவள்ளுவர் பெற்ற வெற்றி-திராவிட முன்னேற்றக்கழகம் பெற்ற வெற்றி. இன்னும் பெறவிருக்கின்ற வெற்றிகளுக்கு இது அச்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

நான் நேற்றைக்கு குறிப்பிட்டதை இங்கே தம்பி கண்ணப்பன் சுட்டிக்காட்டினார். இது ஒரு தேசிய இயக்கமாக -தேசியக்கட்சிகளோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்ற இயக்கமாக கழகம் வளருகிறது என்று நான் சொன்னதை அவர் இங்கே குறிப்பிட்டார். உண்மை தான். அகில இந்திய அளவில் நாளையதினம் இன்றைக்கு வளர்ந்து வருகின்ற அல்லது மாறி வருகின்ற பல்வேறு தன்மைகளில் அரசியல் நிலவரங்களில் பார்த்தால், இனி திராவிட முன்னேற்றக்கழகத்தை விட்டுவிட்டு அகில இந்திய அளவிலே ஒரு அரசியலை யாரும் நடத்த முடியாது என்ற அந்தக் கம்பீரமான எண்ணம் நமக்கெல்லாம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு இயக்கம் வளர வளர தொய்வுகள் ஏற்படுவது உண்டு. ஆனால் திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரை வளர வளர இது மேலும் மேலும் வலிமை பெற்று கொண்டிருக்கிறது என்பதை தான் இது சுட்டிக்காட்டுகிறது.

நேற்றைக்கு பத்தாயிரம் பேர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலே வந்து இந்த இயக்கத்திலே இணைந்திருக்கிறார்கள். இன்றைக்கு தம்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலே 1,500 பேர் இந்த இயக்கத்திலே வந்து இணைந்திருக்கிறார்கள் என்றால், ஒவ்வொரு நாளும் 100 பேர், 200 பேர், 400 பேர், 500 பேர் என்று இயக்கத்திலே சேர சேர நான் சொன்னதைப்போல இது மாநிலக்கட்சியாக அல்ல-அரசியல் இயக்கமாக தேசிய இயக்கமாக தேசிய இயக்கங்களிலே இனி விட்டு விட்டு எண்ணி பார்க்க முடியாத ஒரு இயக்கத்தில் ஒன்றாக திராவிட முன்னேற்றக்கழகம் நின்று நிலைக்கும், இந்திய நாட்டினுடைய அரசியல் ஜாதகத்தை கணிக்கக் கூடிய இடத்திலே இந்த இயக்கம் வெகு விரைவில் இடம் பெறும் என்ற நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன்.

பெரியார் வளர்த்த இந்த இயக்கம், அண்ணா உருவாக்கிய இந்த இயக்கத்தினுடைய காவலர்கள் அவர்களால் உருவாக்கபட்ட இந்த இயக்கத்தின் கொள்கைகள், லட்சியங்கள், சட்ட திட்டங்கள் இவைகள் எல்லாம் வீணாகிவிடவில்லை. வீணாகாது.

என்றைக்கும் இவை வாழும். எத்தனை தலைமுறைகள் மாறினாலும் தி.மு.க. என்ற இந்த இயக்கம் பதித்த கால், இந்த பூமியில் அழுத்தம் திருத்தமாக என்றைக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். உங்களையெல்லாம் நான் வாழ்த்துகிறேன்.

மறுமலர்ச்சி இல்லாத மதிமுக...

நானும், பேராசிரியரும் மற்றும் நம்முடைய கழகத்தின் தானைத் தலைவர்களும் உங்களோடு இணைந்து எதிர்காலத்திலே ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த, உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த, மறுமலர்ச்சி என்ற மாய்மாலத்தால் உங்களை மயக்காமல், மறுமலர்ச்சி என்பது இன்றைக்கு ஏற்பட்டு இருப்பதுதான். இதுதான் மறுமலர்ச்சி. தன்னுடைய தவறுகளை உணர்ந்து மீண்டும் தி.மு.க.வில் இணைகிறோம் என்று தம்பி ராதாகிருஷ்ணன் புத்தகமே வெளியிட்டு இன்றைக்கு இணைந்திருக்கிறாரே, ஆயிரக்கணக்கான உங்களோடு இணைந்திருக்கிறாரே, இதுதான் மறுமலர்ச்சி.

இந்த மறுமலர்ச்சி மணம் வீசட்டும். இந்த மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை இந்தியத் தரணியிலே ஒரு பெரும் கட்சியாக இன்னும் பெரும் கட்சியாக, எனக்கு பேராசை பார்த்தீர்களா, இன்னும் இந்தக் கட்சி பெரிதாக வளர வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்தான் நாங்கள். அப்படிப்பட்ட வளர்ச்சிக்கு நீங்கள் எல்லாம் காரணகர்த்தாக்களாக இருங்கள், விழுதுகளாக அமையுங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X