சகோதர பாசத்தோடு தமிழக, கர்நாடக மக்களுக்காக பாடுபடுவோம் - கருணாநிதி
சென்னை: என்னை பெரியண்ணன் என்று விளித்துள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா. இதே சகோதர பாசத்தோடு இருவரும் இணைந்து, கர்நாடக, தமிழக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடுபடுவோம் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.
சென்னையில் நடந்த சர்வக்னர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய சிறப்புரை..
குமரி முதல் சென்னை வரை எண்ணற்ற திருவள்ளுவர் சிலைகளை திறந்து வைத்துள்ளேன். ஏன், வள்ளுவருக்கு ஒரு கோட்டமும் திறந்து வைத்தேன். ஆனால் 18 ஆண்டுகளாக நடைபெறாத திருவள்ளுவர் சிலையைத் திறக்காமல் பெங்களூரில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் வர மாட்டேன் என்று சபதத்தை மேற்கொண்டிருந்த எனக்கு அந்த சபதத்தை நிறைவேற்றிய சிறப்புக்குரியவராக முதல்வர் எதியூரப்பா திகழ்கிறார். அவருக்கு நான் நன்றிகளை உணர்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்னிப் பிணைந்த திமுக, பாஜக கொடிகள்...
இந்த விழாவுக்கு கிளம்பி வந்த நேரத்தில் வழியெங்கும் கொடிகள் பறந்ததைப் பார்த்தேன். அந்தக் கொடிகளைப் பார்த்த பாமரர்களுக்கு அணி மாறி விட்டதோ என்று சந்தேகம் எழுந்திருக்கும். பாஜக கொடிகளும், திமுக கொடிகளும் பின்னிப் பிணைந்த அந்தக் காட்சியைப் பார்த்தபடி விழா மேடைக்கு வந்து சேர்ந்தேன்.
இந்த சிறப்பான விழாவுக்கான மேடையை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணனனுக்கு நன்றி. இன்று கோகுலாஷ்டமி. நான் மேடையை அமைத்துக் கொடுத்த கிருஷ்ணனுக்கு நன்றி கூறுகிறேன். அப்படிப்பட்ட உழைப்பாளிகள் உள்ள இயக்கம் இது. எந்தப் பணியையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள்.
பேரம் கிடையாது...
அங்கே வள்ளுவர் சிலை அமைத்தால், இங்கே சர்வக்னர் என்று பேரமெல்லாம் கிடையாது. நிச்சயம் அல்ல. இது நட்பு, அன்பு, பரஸ்பரம், அங்கே வள்ளுவருக்கு சிலை, இங்கே சர்வக்னருக்கு சிலை என்று. சிலைகளைப் பார்க்கும் மக்கள், அவர்கள் சொல்லிய நல்லவற்றைப் புரிந்து, தெளிந்து அதைக் கடைப்பிடிப்பார்கள் என்று எண்ணித்தான் இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தாலும் கூட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவையும் சிறப்பான மொழிகளாக உள்ளன. பிற மொழிகளுக்கு தமிழக அரசு மதிப்பு கொடுத்து அவற்றுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
கன்னட சங்க மேல் நிலைப்பள்ளிக்கு தமிழக அரசு நீண்ட காலமாக நிதியுதவி செய்து வருகிறது. அதேபோல கன்னட புத்தாண்டான உகாதிக்கு விடுமுறை அறிவித்தும் வருகிறது தமிழக அரசு. அதேபோல தெலுங்கு வருடப் பிறப்பு, மலையாள மக்களின் ஓனம் பண்டிகைக்கு விடுமுறை கேட்டபோதெல்லாம் விடுமுறை அளித்து வருகிறோம்.
தமிழக பள்ளிகளில், கன்னட மொழி பேசுவோர் தங்களது தாய் மொழியையே முதல் பாடமாக எடுத்துப் படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கன்னட மொழிப் பாட நூல்களை தமிழக அரசு உருவாக்கி அதை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமே அச்சடித்தும் விநியோகிக்கிறது.
பிற மொழியினரை மதிப்பது தமிழக அரசு...
பிற மொழியினரையும், பிற மொழிகளையும் தமிழக அரசு மதிக்கிறது, போற்றுகிறது என்பதற்கு இது அடையாளச் சான்று.
சர்வக்னர் வாழ்க்கை குறித்த குறிப்புகள் இல்லை என்பது உண்மைதான். அவர் கிருஷ்ணதேவராயர், விஜய நகர சாம்ராஜ்யத்தை நிர்மானித்தபோது சர்வக்னர் வாழ்ந்துள்ளார் என்பது மட்டுமே நம்மிடம் உள்ளது.
இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள், கன்னடர்களுக்கு இடையே ஒற்றுமைச் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்பத வரலாறு, மகிழத்தக்க செய்தியாகும்.
சர்வக்னர் மூடப்பழக்க வழக்கங்களை கட்டோடு வெறுத்தவர். வள்ளுவரின் பாடல்களில் தெறித்த தத்துவங்களை சர்வக்னரின் பாடல்கள் காட்டுகின்றன. பெரியார் சொன்னதை அன்றே சொல்லியுள்ளார் சர்வக்னர்.
படைப்புக் கடவுள் பிரம்மா என்பது புராணம். அந்த பிரம்மாவை நையாண்டியாக வர்ணித்து பாடல் புனைந்துள்ளார் சர்வக்னர்.
பிரம்மாவுக்கு இன்று நான்கு தலை. ஆனால் அவருக்கு முன்பு ஐந்து தலை இருந்தது. பரமசிவனுக்கும் ஐந்து தலை. ஒருமுறை, பார்வதி தேவி, பரமசிவனைப் பார்க்க அந்தப்புரத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பிரம்மாவும் அங்கே வந்துள்ளார்.
பிரம்மாவைப் பார்த்த பார்வதி தேவி அது பரமசிவன் என்று எண்ணி ஏமாந்து விட்டார். பார்வதி தேவி ஏமாற என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தார் பரமசிவன். அப்போதுதான், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருப்பதே பார்வதி தேவி ஏமாறக் காரணம் என்பதை உணர்ந்தார்.இதையடுத்து பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இது புராணம். இது கருணாநிதி சொன்ன காலட்சேபம் அல்ல, புராணத்தில் உள்ளது.
இதை தனது பாணியில் நையாண்டியாக கூறியுள்ளார் சர்வக்னர். படைப்புக் கடவுள் பிரம்மா என்ற பற்று வேண்டற்க, பிரம்மா, பிறிதொரு தலையை படைத்து கொள்ளாதது ஏன் என்று கேட்கிறார் சர்வக்னர்.
தம்பியில்லாத குறையைத் தீர்த்தார் எதியூரப்பா...
தனது உரையின்போது எதியூரப்பா என்னை விளிக்கையில், பெரியண்ணா என்று கன்னடத்தில் கூறினார். இதன் மூலம் எனக்குத் தம்பியில்லாத குறையை அவர் தீர்த்து விட்டார். இதனால் மற்ற தம்பிகளெல்லாம் என்னைக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். அந்த தம்பிகளும் கூட மகிழத்தக்க வகையில் இந்த தம்பியும் என்னுடன் இருப்பார்.
இரு மாநில முதல்வர்களும் இப்படி சகோதர பாசத்தோடு, இரு மாநில மக்களையும் நட்போடு பழகச் செய்வோம். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். இதை சிலர் விரும்ப மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். இருவருக்கும் இடையே சுமூக நிலை ஏற்பட்டால் பிறகு அவர்களுக்கு வேலை இல்லையே.
இலங்கைப் பிரச்சினையிலும் கூட சுமூக நிலை ஏற்படக் கூடாது என்று வேண்டித் தவம் இருந்தவர்கள் யார் யார் என்பது எனக்குத் தெரியும். இப்போது சுமூக நிலை திரும்பிய பின்னரும் கூட கிளறி விட்டுக் கொண்டிருப்பவர்களையும் யார் யார் என்று எனக்குத் தெரியும்.
சூப்பர் ஸ்டார், கலைஞானிக்கு நன்றி..
எந்த நிகழ்ச்சிக்கும் வராமல் இருக்கும் திரையுலக் கலைஞர்கள் கூட இன்று இங்கு வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், கலைஞானி கமல்ஹாசன் போன்றோர் இங்கு வந்திருப்பது சர்வக்னரைப் பெருமைப்படுத்தத்தான் என்று எண்ணி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு எனது உரையை முடிக்கிறேன் என்றார் கருணாநிதி.
பின்னர் இரு மாநில முதல்வர்களுக்கும் பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது.
விழா முடிந்த பின்னர் இரு மாநில முதல்வர்களும் இணைந்து ஜீவா பூங்காவில் திறக்கப்பட்ட சர்வக்னர் சிலையை பார்க்க கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications