மீண்டும் காங்கிரசில் இணையும் புதுச்சேரி கண்ணன்
புதுச்சேரி: காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டு, மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி புதுச்சேரி மக்கள் காங்கிரஸை ஆரம்பித்து, பின்னர் அதிலிருந்தும் விலகி காங்கிரஸில் இணைந்து, பின்னர் மீண்டும் தனிக் கட்சி ஆரம்பித்த கண்ணன் தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைகிறார்.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் நிறுவனராக இருப்பவர் கண்ணன். தற்போது இவர் மீண்டும் காங்கிரஸில் இணையவுள்ளார்.
கண்ணன் கட்சியின் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான க.லட்சுமிநாராயணன், மத்திய அமைச்சர் நாராயணசாமியுடன் இதற்காக டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கண்ணன் கட்சிக்கு தற்போது புதுச்சேரி சட்டசபையில் 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் கண்ணன் கட்சி, நாராயணசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து பணி செய்தது. இதையடுத்து மீண்டும் காங்கிரஸுடன் நெருங்கினார் கண்ணன். இந்த நிலையில் நாராயணசாமி மற்றும் முதல்வர் வைத்தியலிங்கத்தின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸுக்குத் திரும்புகிறார் கண்ணன்.
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு பு.மு.கா.வை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் சிறுபான்மை அரசாக இருக்கும் காங்கிரஸ் கூடுதல் பலம் பெற்றுள்ளது.
காங்கிரஸில் இணைந்த பிறகு கண்ணனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications