புதுச்சேரி: ஹோமோ செக்சுக்கு மறுத்த கைதி கொலை!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் ஹோமோ செக்சுக்கு வர மறுத்த கைதியை சக கைதிகள் அடித்தே கொன்றனர்.
புதுவை தவளகுப்பம் இளவரசன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அமிர்தசுந்தரி (38) என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் செல்வராஜ் சந்தேகம் அடைந்ததால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் செல்வராஜ், அமிர்தசுந்தரியை எரித்துக் கொல்ல முயன்றுள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த அமிர்தசுந்தரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு, அமிர்தசுந்தரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்வராஜ் மீது தவளகுப்பம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் செல்வராஜை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறையில், செல்வராஜை கைதிகள் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அழைத்த போது அவர் மறுத்து விட்டதாகவும், அதனால் ஆவேசம் அடைந்த கைதிகள் சிலர் தான் அடித்து கொன்றுவிட்டதாகவும் தெரிய வந்தது.
செல்வராஜ் இப்படி இறந்த நிலையில், அவரது மனைவி அமிர்தசுந்தரியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.