தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி- ஐ.நா. பயணத்தை ரத்து செய்தார் ராஜபக்சே

செப்டம்பர் 23ம் தேதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள ராஜபக்சே தலைமையில் கருணா, தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய ராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய 80 பேர் கொண்ட பெரும் கும்பலுடன் ஐ.நா. செல்லவிருந்தார் ராஜபக்சே.
கூட்டத்தின் முதல் நாளிலேயே ராஜபக்சே பேச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்றைய தினமே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர், சீன, பிரான்ஸ், லிபியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் அன்றே பேசுவதாக உள்ளது.
இந்த நிலையில், ராஜபக்சே வருகைக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களை இழைத்தவர்களுடன் ராஜபக்சே ஐ.நா.வுக்குள் வரக் கூடாது என்று கோரிய இந்த அமைப்பு, இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் மனு அனுப்பியிருந்தது.
ராஜபக்சே குழுவில் போர்க் குற்றவாளிகள் என கூறப்படும் பலரும் அடங்கியிருப்பது குறித்து பல மனித உரிமை அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் தனது ஐ.நா. பயணத்தை ரத்து செய்து விட்டார் ராஜபக்சே. அவருக்குப் பதில் பிரதமர் விக்கிரமநாயக்க, ராஜபக்சேவின் வெளிவிவகார ஆலோசகரும் முன்னாள் வெளிவிவகாரச் செயலருமான ஜி.விஜயசிறி, பிரதமரின் செயலர் மகிந்த பந்துசேன, பிரதமரின் தனிப்பட்ட செயலர் இந்திக சந்திரதிலகே ஆகியோர் மட்டுமே செல்வார்கள் என தெரிகிறது.
அப்பாவித் தமிழர்களை மிகக் கொடூரமாக இலங்கைப் படையினர் கொல்வது போன்ற வீடியோக் காட்சிகளும், தொடர்ந்து புகைப்படங்களும் வெளியாகிய நிலையில் ராஜபக்சே தனது பயணத்தை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications