இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்க ஏவுகணையை மாற்றி அமைத்த பாக்.!
டெல்லி: அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான ஹர்பூன் ஏவுகணை மற்றும் கடற் கண்காணிப்பு விமானமான பி-3சி ஆகியவற்றை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில், மாற்றி அமைத்துள்ளது பாகிஸ்தான் என்று அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் அமெரிக்க அரசு புகார் தெரிவித்துள்ளதாம்.
அமெரிக்க சட்ட விதிமுறைகளை மீறிய செயல் இது என்றும் அமெரிக்க அரசு பாகிஸ்தானை கடுமையாக கண்டித்துள்ளதாம்.
குறுகிய தூர கண்காணிப்புக்கான பி-3சி விமானத்தை நீண்ட தூர பயணத்திற்கேற்றார் போல பாகிஸ்தான் மாற்றி அமைத்துள்ளதாம்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் அனைத்து ராணுவ ரீதியிலான உதவிகளையும் அது தனக்கு எதிராகவே பயன்படுத்தி வருவதாக இந்தியா ஏற்கனவே குற்றம் சாட்டி வந்த நிலையில் அதை உண்மை என்று நிரூபிப்பது போல பாகிஸ்தானின் செயல் உள்ளதாக அமெரிக்க மீடியாக்கள் கூறியுள்ளன.
பாக். மறுப்பு...
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹூசேன் ஹக்கானி கூறுகையில், ஹர்பூன் ஏவுகணையை பாகிஸ்தான் சட்டவிரோதமாக மாற்றி அமைக்கவில்லை.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தி தவறானது. தவறான தகவல்களின் அடிப்படையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மீது அபாண்டமான முறையில் சுமத்தப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணியை அமெரிக்கா புரிந்து கொள்ளும் என நம்புகிரோம். அவர்களுக்கு இதை தெளிவுபடுத்த முயற்சிப்போம்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக விளங்குவதையும் அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார்.
ஏ.க்யூ.கானுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்...
இதற்கிடையே, பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கானுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இதுவரை அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் பாக். அரசு நீக்கி விட்டது.
தற்போது கானை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதேபோல அவரும் விரும்பிய இடத்திற்குப் போகலாம்.
கடந்த 2004ம் ஆண்டு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக ஈரான், லிபியா, வட கொரியாவுக்கு வழங்கியதாக ஒப்புக் கொண்டார் கான். இதையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அன்று முதல் அவர் வீட்டுக் காவலில்தான் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications