சென்னையில் இன்று முதல் ரேஷன் கார்டுகள் பரிசோதனை
சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு பரிசோதனை இன்று தொடங்குகிறது. 3 முறை பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு போலி கார்டுகள் ரத்து செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுகளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்காக சென்னையில் ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளில் அமைச்சர் வேலு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது, 2009-ம் ஆண்டில் மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ரேஷன் கார்டுகளில் 8 கோடி பேர் இடம் பெற்றிருந்தனர். சுமார் 1.4 கோடி அளவுக்கு கூடுதலாக அட்டைகளில் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு அதிக அளவு நிதி செலவும், தானிய இழப்பும் ஏற்பட்டு வந்தது. இதை களைவதற்காக எந்த அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும் என்று பயந்து வந்தனர். ஆனால், தமிழக முதல்-அமைச்சர் துணிச்சலாக இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகரில் ரேஷன் கார்டுகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாக இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2-ம் கட்டமாக நாகர்கோவில், தேனி, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் 7 லட்சத்து 71 ஆயிரம் ரேஷன் கார்டுகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3-வது கட்டமாக தஞ்சை, கன்னியாகுமரி, விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர் போன்ற 14 மாவட்டங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. தற்போது, 65 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
4-வது கட்டமாக நீலகிரி, மதுரை, சிவகங்கை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் வில்லிவாக்கம், ஆவடி, பெரம்பூர், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், பரங்கிமலை ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது என்றார்.
ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணிகள் ஒரு மாதத்திற்கு நடைபெறும். இதற்காக சென்னையில் ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.


Click it and Unblock the Notifications
