தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த 195 டன் நச்சு பொருட்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய 9 கன்டெய்னர்களில் 195 டன் நச்சு கழிவு பொருட்கள் இருப்பதை சுங்க இலாகாவினர் கண்டுபிடித்தனர். அவற்றை உடனே அந்தந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்க இலாகா புனலானய்வு பிரிவு அதிகாரிகள் கமிஷனர் ராஜன் தலைமையில் இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னர்களை அதிரடி சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 9 கன்டெய்னர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.
இந்த கன்டெய்னர்கள் மலேசியா, சவூதி அரேபியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தூத்துக்குடி எஸ்எல் டிரேடிங் கம்பெனி, கார்பர் பெட்ரோகெம் இன்ஸ்டீரிஸ் மற்றும் சென்னையை சேர்ந்த அரியலூர் மெட்ராஸ் சிமி்ண்ட் ஆகிய கம்பெனிகள் பெயரில் வந்தன.
இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், உற்பத்தி கழிவுகள் இருப்பதாக அந்த நாடுகளில் உள்ள சுங்க இலாகா சான்றிதழ் கொடுத்துள்ளது. அதிகாரிகள் மலேசியாவில் இருந்த வந்த ஒரு கன்டெய்னரை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.
அதில் பயன்படுத்தப்பட்ட ரப்பர் கையுறைகள், கலர் ரப்பர் துண்டுகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் போன்றவை இருந்தன. ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த 4 கன்டெய்னர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகள் போன்றவையே இருந்தது.
இந்த கழிவுகள் அனைத்தும் நச்சுதன்மை கொண்டது. தொற்று நோய் கிருமிகள் உள்ளன. இவை காற்றில் கலந்து அபாயகரமான விளைவுகளை உருவாக்கும். எனவே இவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என இதனை ஆய்வு செய்த மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கழிவுகளை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த மதிப்பில 25 சதவீதம் வரை அபராதம் விதித்தனர். மேலும் 9 கன்டெய்னர்களை சீல் வைத்துள்ளனர். அக்டோபர் 7ம் தேதிக்குள் இதனை திருப்பி அனுப்ப வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
