நடராஜர் கோயிலை அரசு ஏற்றது செல்லும்!: தீட்சிதர்கள்- சு.சாமி மனுக்கள் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Chidambaram
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொண்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தீட்சிதர்களும் சுப்பிரமணிய சாமியும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

மேலும் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கூறியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலை பல்லாண்டு காலமாக தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர். ஆனால், அங்கு தமிழில் வழிபாடு நடத்தத் தடை விதித்து அடாவடி செய்து வந்தனர்.

இதையடுத்து இந்து அறநிலையத்துறை கடந்த 31.7.1987 அன்று கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆனால், இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் முறையீடு செய்யாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறு என்று கூறி தீட்சிதர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடு்த்து நிர்வாக அதிகாரி நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் கடந்த 2006ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையாளரின் பரிந்துரைப்படி கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயல் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த சிவ பக்தர் ஆறுமுகசாமி, தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய இயக்குனர் சத்தியவேல்முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பானுமதி, நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து தீட்சிதர்களும், அவர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.ரவி ராஜபாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. தொடர்ந்து நடந்து விசாரணைகளையடுத்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

தங்கள் தீர்ப்பி்ல், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டார்.

அறநிலையத்துறை சட்டம் பிரிவு 45 (1)ன் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தால் நிர்வாகத்தை ஏற்பதற்கு செயல் அதிகாரியை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.
எனவே இந்த வழக்கில் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும்.இது தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+