விவசாயிகளுக்கு உதவ திமுக தவறிவிட்டது-ஜெ.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 50 நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடையவில்லை. இதை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தற்போது ஆற்றுப்பாசனம், நிலத்தடி நீர் பாசனம் இரண்டையும் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உறைந்து போயுள்ளனர். இதனால் கடைமடை பகுதிகளை விரைவில் சென்றடையும் வகையில் கூடுதலாக, தவனை முறையில் இல்லாமல் ஒரே முறையில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கு...
உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை மானிய விலையில் கிடைப்பதில்லை என்றும், சென்ற ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை என்றும், கூட்டுறவுக்கடன், நகைக்கடன் ஆகியவை இன்னமும் வழங்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
இவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
மனிய விலையில் உரம் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்பட வேண்டும். பயிர்க்கான காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இதைச் செய்ய திமுக அரசு தவறிவிட்டதன் காரணமாக விவசாயிகள் பெருத்த பாதிப்பிற்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர்.
22ம் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம்...
விவசாயிகளுக்கு கூட்டுறவுக்கடன், நகைக் கடன் ஆகியவற்றை அளிக்காத, உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்காத, பயிர் காப்பீட்டுத்தொகையை தராத திமுக அரசைக் கண்டித்தும்.
அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக்கடன், நகைக்கடன், மானிய விலையில் உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை கிடைக்கவும், தங்குதடையின்றி 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கவும், சம்பா சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிடவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
திருவாரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணிச்செயலாளர் கேஏகே முகில் தலைமையிலும், திருவாரூர் மாவட்டக்கழகச்செயலாளர் காமராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications