ஜி 20 மாநாட்டில் மன்மோகன் சிங்
பிட்ஸ்பர்க்: 'பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை நிறுத்திவிடாதீர்கள்... இன்னும் முடுக்கிவிடுங்கள்' என ஜி20 நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த ஜி 20 நாடுகள் மாநாட்டில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மாநாட்டில் பிரதமர் பேசியதிலிருந்து சில முக்கிய பகுதிகள்:
"சர்வதேச அளவில் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி அடைந்து பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும். தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் குறைய வேண்டும். நிதி நிறுவனங்கள் தங்களுடைய சொந்தக்காலில் நின்று பணியாற்றும் வலிமையைப் பெற வேண்டும். ஏழைகள் துயரிலிருந்து மீள வேண்டும்.
பொருளாதாரம் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் அவசரப்பட்டு, இப்போது எடுத்துள்ள மீட்சி நடவடிக்கைகளைப் பாதியிலேயே கைவிட்டுவிடக்கூடாது.
பொருளாதாரத்தை மீட்க 1.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அந்அரசுகளே செலவிட வேண்டும் என்று 'ஜி-20' அமைப்பின் முந்தைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கின. இப்போது காணப்படும் மீட்சி நடவடிக்கைகளே போதும் என்று முடிவுகட்டி, இனி பணவீக்கம் அதிகமாகிவிடும் என்று அஞ்சி இந்த முடுக்க நடவடிக்கைகளைப் பாதியில் நிறுத்திவிடக்கூடாது. அது மிக மோசமான நிலைமைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
ஏழைகளுக்குக் குறைந்த விலையில் பொருள்களைத் தருவது, கடன்கள் மீதான அபராத வட்டியைக் குறைப்பது, சலுகை வட்டியில் கடன் தருவது, வரிகளிலிருந்து விலக்கு அளிப்பது, ரொக்க மானியம் கொடுப்பது போன்ற மீட்பு நடவடிக்கைகளை இன்னும் சிறிது காலத்துக்குத் தொடர வேண்டும்.
வளரும் நாடுகள் மீதும் அக்கறை காட்டுங்கள்...
வளர்ந்த நாடுகளில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்படுவதால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் எப்படிப் போனால் என்ன என்று நினைக்கக்கூடாது. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய உச்ச நிலைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் வளர்ந்த நாடுகளின் பொருள்களுக்கே சந்தை கிடைக்கும்.
ஏற்றுமதி குறைந்ததால் வருவாய் இழப்பைச் சந்தித்த வளரும் நாடுகளில் முதலீடு பெருக உதவ வேண்டும்.
வறட்சிக்கு மத்தியிலும் வளர்ச்சி...
இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. மழைப் பொழிவு போதவில்லை. அப்படியிருந்தும் 2009-10-ம் ஆண்டில் வேளாண்மைத்துறையில் மட்டும் வளர்ச்சி வீதம் 6.3 சதவிகிதம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது இப்படியே வளர்ந்து அடுத்த ஆண்டு 7சதவிகிதம் முதல் 7.5 சதவிகிதம் வரை உயரும் என்று நம்புகிறோம்.
வளரும் நாடுகள் காரணம் அல்ல...
சர்வதேச அளவில் இப்போது காணப்படும் நெருக்கடிக்கு வளரும் நாடுகள் எந்த வகையிலும் காரணம் அல்ல; மாறாக நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவை வளரும் நாடுகள்தான்.
2009 வரையில் ஆண்டுக்கு 6.5 சதவிகிதம் என்ற வளர்ச்சி வேகத்தில் இருந்த வளரும் நாடுகளின் பொருளாதாரம், இனி 1.5 சதவிகித என்ற அளவுக்குத்தான் வளரும் என்று தெரிகிறது. அதாவது வளர்ச்சிநிலை மாறி, வீழ்ச்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் வளரும் நாடுகளில் மக்களின் 'உண்மையான ஊதிய மதிப்பு' குறைந்து வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.
வளரும் நாடுகளில் இப்போதிருப்பவர்களுடன் மேலும் 9 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழே போவார்கள் என்று தெரியவருகிறது.
இவற்றால் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பதற்றம் ஏற்படும். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியாகச் செய்ய நினைக்கும் மாற்றங்களுக்குக் கடும் எதிர்ப்பு தோன்றும். எனவே வளரும் நாடுகளின் பொருளாதாரம் மீட்சி பெற, உலக வங்கி போன்ற அமைப்புகள் மேலும் பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்ய வேண்டும்' என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications