எச்ஐவி பாதித்த அரசு ஊழியர்களுக்கு 18 மாத விடுமுறை!
சென்னை: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதித்த அரசு ஊழியர்களுக்கு, 18 மாத ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசின் பொது மற்றும் நிர்வாகத் துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் பாதித்த அரசு ஊழியர்களுக்காக ஊதியத்துடன் கூடிய மருத்து விடுப்பு அளிக்கும் முதல் மாநிலம் தமிழகம்தான்.
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி பாதித்த அரசு ஊழியர்களுக்கு இந்த விடுமுறை சலுகையைத் தர எந்தத் துறையும் தயக்கம் காட்டக் கூடாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை குறித்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. அதை ஏற்று தற்போது இந்த மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
அரசுத் துறையில் எத்தனை பேருக்கு எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது என்ற புள்ளி விவரம் அரசிடம் இல்லை.
எச்ஐவி, எய்ட்ஸ் பாதித்தவர்களை வேலையிலிருந்து விடுவிக்கும் நிலை தனியார் துறையில் நிலவுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் அவர்களுக்கும் காசநோய், புற்றுநோய், தொழுநோய் பாதித்தவர்களுக்கு எப்படி 18 மாத ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படுகிறதோ, அதேபோல, எய்ட்ஸ், எச்ஐவி பாதித்தவர்களையும் பாவித்து விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்தது.
ஒரு அரசு ஊழியர் இந்த விடுமுறையைப் பயன்படுத்த நினைத்தால் தனக்கு எச்ஐவி அல்லது எய்ட்ஸ் பாதித்திருப்பதாக மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து விடுமுறைக்கு விண்ணப்பித்தால் போதும் என்றார் சுப்புராஜ்.


Click it and Unblock the Notifications
