ராகுல் காந்திக்கு விடுதலைப் புலிகளால் மிரட்டல் - உளவுத்துறை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.
ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல் உள்ளதாம்.
ஆனால் தனது பாதுகாப்பு மிரட்டலைப் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி மேற்கொள்ளும் திடீர் பயணங்களால் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறதாம்.
சமீபத்தில் உ.பி. வந்த ராகுல் காந்தி, யாருக்கும் தெரியாமல், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தலித் குடியிருப்புக்கு விஜயம் செய்தார். அங்குள்ள தலித் வீடு ஒன்றில் தங்கினார். அங்கேயே இரவைக் கழித்தார். சாப்பிட்டார், அவர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கினார். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடினார். அங்கேயே குளிக்கவும் செய்துள்ளார்.
ராகுலின் இந்தப் பயணத்திற்கு மாயாவதி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்வாறு ராகுல் காந்தி நடந்து கொண்டால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட முடியாது என்றும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதேபோல கடந்த ஆண்டு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள ஒரிசாவுக்குச் சென்ற ராகுல் காந்தி, பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல், பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அங்கு இரவைக் கழித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இனிமேல் தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன் என்று கூறியிருந்தார் ராகுல் காந்தி. எனவே இனி அவர் அடிக்கடி தமிழகம் வரக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக போலீஸாருக்கும், உளவுப் பிரிவினருக்கும் பணி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
