ரெட்டிக்காக யாரும் சாகவில்லை-காங். தலைவர்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வராக இறந்த ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக 600 பேர் வரை பலியானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல. அது அரசியல் விளம்பரம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இது ஒரு மோசடி செயல். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகனை முதல்வராக வேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் செய்த அரசியல் விளம்பரம்.
இந்த விளம்பரத்தின் மூலம் தான் அவர்கள் தற்போது காங்கிரஸ் உயர்மட்டத்தை மிரட்டி வருகின்றனர். 2014ம் ஆண்டு வரை ரோசய்யா தான் முதல்வராக இருப்பார் என்ற முடிவை அவர்கள் விரும்பவில்லை.
அவர்கள் அந்த சமயத்தில் சாதாரணமாக இறந்தவர்களையும், வேறு காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டவர்களையும் ராஜசேகர ரெட்டியின் கணக்கில் சேர்த்துவிட்டனர். ராஜசேகர ரெட்டி என்ன இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை விட பெரிய தலைவரா என்றார்.
பெண் அமைச்சர் ராஜினாமா மிரட்டல்...
இந்நிலையில் வாரங்கலில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆந்திர பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சுரேகா,
ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெரும்பாலான அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் வலியுறுத்தி வருகின்றனர். அவரை முதல்வராக அறிவிக்காவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்.
ரோசய்யா இடைக்கால முதல்வர் தான். காங்கிரஸ் சட்டசபை எம்எல்ஏக்கள் கூடி தலைவரை தேர்ந்தெடுக்காத வரையில் மாநிலத்தில் இடைக்கால அரசே பொறுப்பில் உள்ளதாக கருதப்படும்.
எனக்கும் எனது கணவர் முரளிதரராவுக்கும் ராஜசேகர ரெட்டி தான் பதவி வழங்கினார். அவரது மகனுக்கு பதவி இல்லையென்றால் எங்களுக்கும் வேண்டாம்.
தாராளமாக வெளியேறலாம்-ரோசய்யா...
அமைச்சர் சுரேகவுக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் ரோசய்யா கூறுகையில்,
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவர்கள் தாராளமாக வெளியேறலாம். நான் யாரையும் கட்டுப்படுத்த விரும்ப வில்லை. காங்கிரஸ் மேலிடம் என்னை முதல்வராக நியமித்துள்ளது. என்னை எதிர்ப்பவர்கள் மேலிடத்தை எதிர்ப்பவர்கள் ஆவார்கள் என்றார்.
இதற்கிடையே ராஜசேகர ரெட்டியின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்காவிட்டால் பதவி விலகப் போவதாக காங்கிரஸ் தலைமையை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications