நடு வானில் பைலட்டுகள்- விமான ஊழியர்கள் சண்டை- காற்றில் பறந்த பாதுகாப்பு விதிகள்

கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க, விமானத்தில் இருந்த 106 பயணிகளை சுத்தமாக மறந்து விட்டு, பாகிஸ்தானுக்கு மேலே விமானம் பறந்த நிலையில் இந்த சண்டை நடந்துள்ளது.
ஏர் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கொடுமையான சம்பவத்தின் விவரம்...
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் ஏர்பஸ் ஏ-320 விமானம் அது. சனிக்கிழமை இந்த விமானம் பாகிஸ்தானுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் பைலட் மற்றும் துணை பைலட்டுக்கும், விமான ஊழியர்கள் இருவருக்கும் (ஒருவர் பெண்) இடையே சண்டை மூண்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் சண்டை போட்டுள்ளனர்.
ஷார்ஜா விமான நிலையத்திலேயே அவர்களுக்குள் சண்டை மூண்டு விட்டதாம். இந்த நிலையில் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பெரும் சண்டையாக அது மாறியுள்ளது.
இதுகுறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், தங்களது 24 வயது சக ஊழியையிடம், பைலட்டுகள் தவறாக நடக்க முயன்றனர். இதனால்தான் சண்டை மூண்டதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் பைலட்டுகளோ, கேபின் ஊழியர் ஒருவர்தான் சண்டைக்குக் காரணம் எனவும், இதன் மூலம் விமானத்தின் பாதுகாப்பை அவர் கேள்விக்குறியாக்கி விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதை இரு தரப்புமே மறுக்கவில்லை. இவர்களின் சண்டையைப் பார்த்து பெரும் பீதியுடன் இருந்தனராம் பயணிகள். சண்டையில் கேபின் பெண் ஊழியருக்கும், துணை பைலட்டுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், சர்ச்சையில் சிக்கிய நான்கு பேரையும் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சண்டையின்போது நடந்த கொடுமை என்னவென்றால் ஒரு கட்டத்தில் காக்பிட்டில் யாருமே இல்லையாம். அனைவரும் வெளியே வந்து சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பைலட், கராச்சிக்கு தான் விமானத்தைத் திருப்பப் போவதாக மிரட்டினாராம். கிட்டத்தட்ட விமானம் ஹைஜாக் செய்யப்படுவதை போன்ற உணர்வு பயணிகளுக்கு ஏற்பட்டதாம்.
இந்த சண்டை குறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், ஷார்ஜா விமான நிலையத்திலேயே பிரச்சினை ஏற்பட்டு விட்டது. விமானி கேப்டன் ரன்பீர் அரோரா மற்றும் துணை விமானி ஆதித்ய சோப்ராவிடம், கேபின் ஊழியர்கள் விமான பயணம் குறித்து விவாதித்தனர். விமானம் கிளம்புவதற்கு முன்பு வழக்கமாக மேற்கொள்ளப்படும் உரையாடல்தான் இது.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விமானம் கிளம்பியதும், காக்பிட்டுக்குள் பெண் ஊழியர் ஒருவர் போனார். அதைப் பார்த்த ஒரு பைலட், அவரது கையைப் பிடித்து வேகமாக தள்ளி விட்டார். வெளியேறுமாறும் கத்தினார்.
தள்ளி வேகத்தில் அந்தப் பெண் ஊழியர் காக்பிட்டின் கதவில் போய் மோதிக் கொண்டார். இதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதைப் பார்த்ததும் கேபின் ஊழியர் அமீத் கண்ணா விரைந்து வந்து என்ன நடக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது இரு பைலட்டுகளும் சேர்ந்து அமீத் கண்ணாவைத் திட்டி வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சண்டை மூண்டது என்கின்றனர்.
சண்டைக்குப் பின்னர் காக்பிட் கதவை இரு விமானிகளும் மூடி விட்டனர். அதன் பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் விமானம் லக்னோவில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானிகளிடம் சென்ற அமீத் கண்ணா, அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாரம். இதையடுத்து விமானம் டெல்லி கிளம்பிச் சென்றது. ஆனால் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியரிடம், போலீஸில் பலாத்காரப் புகார் கொடுக்குமாறு அமீத் கண்ணா கூறினாராம். அதன் பேரில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இரு விமானிகள் மீதும் புகார் கொடுத்தாராம் அந்தப் பெண் ஊழியர்.
இதைத் தொடர்ந்து இரு விமானிகள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பெரும் கொதிப்படைந்துள்ளது. இந்த சண்டையால், விமானத்தின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. பயணிகளைப் பற்றி யாருமே கவலைப்படாமல் நடந்து கொண்டுள்ளனர். இது மிகவும் சீரியஸான விஷயம். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications