அருணாச்சல் பிரதேசம் மாபெரும் வளர்ச்சி பெறும் - வெளியிட்டார் பிரதமர்
பாசிகாட் (அருணாச்சல் பிரதேசம்): ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின், அருணாச்சல் பிரதேச மாநில மக்கள் வளர்ச்சித் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். நாட்டின் பிற மாநிலங்களுக்கு நிகராக அது வளர்ச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரத்தைத் நேற்று தொடங்கினார்.
கிழக்கு சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த பாசிகாட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் பதவியில் உள்ளதன் மூலம் அருணாச்சல் பிரதேச மக்கள் பெரும் பலன்களை அடைந்து வருகின்றனர்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி பல்வேறு பலன்களை அருணாச்சல் பிரதேசம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு அருணாச்சல் பிரதேச மாநிலத்திற்காக ரூ. 24,000 கோடி வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிற வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு நிகராக அருணாச்சல் பிரதேசத்தையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் அருணாச்சல் பிரதேச மாநில அரசு நிர்வாகம் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வது பாராட்டுக்குரியது என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications