வெள்ளம்: ராகவேந்திரா கோவிலில் 3 பேர், 65 பசுக்கள் பலி-பரிகார பூஜை
ஹைதராபாத்: மந்த்ராலயம் ராகவேந்திர கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததில் அங்கிருந்த 3 பேர் பலியானார்கள். மேலும் 65 பசுக்கள் இறந்தன. கோவிலுக்குள் உயிர்கள் பலியானதை அடுத்து பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் துங்கபத்ரா நதியில் தண்ணீர் வெள்ள அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, நீர் ஊருக்குள் புகுந்தது.
வெள்ளம் மந்த்ராலயம் ராகவேந்திரர் கோவிலையும் விட்டுவைக்கவில்லை. கோவில் சுற்று சுவர், நுழைவு வாயில் இடிந்து விழுந்தது. மேலும் மூலவர் சன்னதியை தவிர்த்து மற்றவை சேதம் அடைந்தன.
கோவிலுக்குள் பல பக்தர்கள் மாட்டி கொண்டனர். அவர்களில் முதல் மாடியில் தங்கியிருந்தவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக காப்பாற்றினர். ஆனால், கோவிலுக்குள் இருந்த 3 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 65 பசு மாடுகளும் பலியாகிவிட்டன.
தற்போது மழை ஒரளவு குறைந்ததை அடுத்து வெள்ள நீர் வடியத் துவங்கியது. கோவில் நிர்வாகம் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கோவிலுக்குள் இயற்கை சீற்றத்தால் உயிர் பலி ஏற்பட்டிருப்பதால் பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதி கோவிலில் இருந்து அர்ச்சகர்கள் குழு ராகவேந்திரர் கோவிலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications