மனநிலை பாதித்த பெண்ணிடம் பலாத்காரம்-வக்கீல் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து மானபங்கம் செய்ய முயன்ற வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கருகலா கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி அனிதா. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.
நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அனிதா வள்ளியூர் பேருந்து நிலையம் வந்தார். பின்னர் வீடு திரும்ப நினைத்தார். ஆனால், அங்கு எந்த பஸ்சில் ஏறி எப்படி வீட்டுக்கு செல்வது என தெரியாமல் பேருந்து நிலையத்தையே திரும்ப திரும்ப சுற்றி வந்தார்.
அவர் நேற்று நள்ளிரவு 11 மணியாகியும் அங்கேயே அமர்ந்து இருந்தார். அப்போது பணகுடியை சேர்ந்த பிரபல வக்கீல் வரதராஜன் என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர் அந்த பெண்ணை விடுதியில் தங்க வைத்து காலையில் ஊருக்கு அனுப்புவதாக கூறி அருகில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். லாட்ஜில் அனிதா தனது உறவினர் என கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் லாட்ஜில் குளித்து விட்டு வரும்போது வக்கீல் வரதராஜன் அவரை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மிரண்டு போன அந்த பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து லாட்ஜ் ஊழியர்களும், மேலாளர் ஜஸ்டினும் அந்த அறைக்கு வந்து அந்த பெண்ணை காப்பாற்றினர்.
இதை தட்டி கேட்ட லாட்ஜ் மேலாளரை வக்கீல் வரதராஜன் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லாட்ஜ் மேலாளர் ஜாஸ்டின் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதுமான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வக்கீல் வரதராஜனை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
