இலங்கைக்கான குழுவில் எதிர்க்கட்சிகள் தவிர்ப்பு ஏன்? - கனிமொழி பதில் சொல்லாமல் நழுவல்

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
சென்னை: இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிடச் சென்ற திமுக தலைமையிலான தமிழக குழுவில் எந்த எதிர்க்கட்சியும் இடம் பெறாதது ஏன் என்ற கேள்விக்கு திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.

இலங்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழு இன்று பிற்பகல் கிளம்பிச் சென்றது. இந்தக் குழுவில் திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் பயணம் குறித்த அதிகார்ப்பூர்வ செய்தி கூட நேற்றுதான் வெளியானது. அதுவரை இதுகுறித்து எந்த செய்தியும் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும், மத்திய அரசுத் தரப்பிலிருந்தும் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. தமிழக அரசுதான் இதுகுறித்த அறிவிப்பை நேற்று ஒரு செய்திக்குறிப்பு மூலம் வெளியிட்டது.

இந்தக் குழுவின் பயணம் குறித்து ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மேலும், இந்தக் குழுவில் திமுக கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் மட்டும் இடம் பெற்றிருப்பது ஏன், வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இடம் பெறாதது ஏன், தேசிய அளவிலான ஒரு குழுவாக அமைக்கப்படாமல், தமிழக அளவிலான குழுவாக செல்வது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை இல்லை.

நேற்று முதல்வர் கருணாநிதியை இந்தக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியில் வந்த திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியிடம், எந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பியும் இந்தக் குழுவில் இடம் பெறாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர் பதிலளிக்காமல் புன்னகைத்தபடி நழுவினார்.

இருப்பினும் அவருக்கு அருகில் இருந்த திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் குறுக்கிட்டு, இதற்கு முன்பு இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் அதிமுக பங்கேற்றதில்லை. புறக்கணித்துள்ளது. மேலும் டெல்லிக்கு பிரதமரை சந்திக்கச் சென்றபோதும் அவர்கள் வரவில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கை அதிகாரிகள் கூட்டிச் செல்லும் முகாம்களுக்கு மட்டும்தான் போவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அப்படி இருக்காது என்று நம்புகிறேன். நாட்டின் பிற பகுதிகளுக்கும், அதாவது, இதுவரை யாரும் பார்த்திராத தமிழர் முகாம்களுக்கும் கூட நாங்கள் போவோம் என்று நம்புகிறேன் என்றார்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு கிட்டத்தட்ட 14 முகாம்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியிலிருந்து யாராவது வந்தால் இவற்றில் ஏதாவது ஒரு சில முகாம்களை மட்டுமே இலங்கைத் தரப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இருப்பதிலேயே பெரிய முகாமான மாணிக் பார்ம் முகாம் வளாகத்திற்குள்ளேயே பல முகாம்களை ரகசிய கொட்டடிகளைப் போல வைத்துள்ளது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற எம்.பிக்கள் கூறுகையில், அங்குள்ள தமிழர்களின் நிலையை கண்டறிந்த பிறகு, அவர்களுக்கு தமிழக அரசு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது பற்றியும் விசாரிப்போம். 14-ந் தேதி சென்னை திரும்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை திரும்பியதும் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் நிலை பற்றியும், அவர்களை மறுபடியும் பழைய இடத்தில் குடியமர்த்துவதற்கு இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் எடுத்துரைப்போம். மேலும் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிப்போம்.

இலங்கை தமிழர்களை குடியமர்த்தி மறுவாழ்வு கொடுப்பதற்காக இந்திய அரசிடம் இருந்து பெற்ற ரூ.500 கோடியை இலங்கை அரசு எந்த வகையில் செலவழித்துள்ளது என்பது பற்றியும் கண்டறிவோம் என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+