இலங்கைக்குப் போயுள்ளது அரசு அனுப்பியுள்ள குழு அல்ல - கருணாநிதி
சென்னை: இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள எம்.பிக்கள் குழு மத்திய அரசினால் அனுப்பப்பட்ட குழு அல்ல. அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தங்களது சொந்த செலவில் இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி -பதில் பாணி அறிக்கை:
கேள்வி: பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு, இலங்கைக்கு சென்றிருப்பதை கபட நாடகம் என்று ஒரு நடிகர் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சிகள் ஏன் இடம் பெறவில்லை என்று பழ.நெடுமாறன் கேட்டிருக்கிறார். அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஏன் பிரதமர் கூட்டவில்லை என்றும், வெளி உறவுத்துறை பிரதிநிதிகள் ஏன் அதில் உடன் செல்லவில்லை என்றும் என்.வரதராஜன் கேள்வி கேட்டிருக்கிறாரே?
பதில்: பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அனுப்ப வேண்டுமென்று காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று, அந்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளி உறவுத்துறை அனுமதித்துள்ளது.
இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவிலே அனுப்பப்பட்ட குழு அல்ல. அரசு சார்பிலே குழு அனுப்பும்போது தான் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதியையும் அனுப்ப வேண்டும்.
தற்போது செல்லும் குழுவிலே உள்ள உறுப்பினர்களுக்கான விமான கட்டணம் போன்ற செலவுகளைக் கூட அந்தந்த கட்சிகள் தான் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் எது நடந்தாலும், குறை காண்பது சிலரது வழக்கம். பாராளுமன்றத்திலே உள்ள அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களையும் அனுப்பினால், வெளியே உள்ள கட்சிகளின் பிரதிநிதிகளையும் சேர்த்து ஏன் அனுப்பவில்லை என்று கேள்வி கேட்பார்கள். குழுவிற்கு அனுமதி கொடுக்காவிட்டால் ஏன் கொடுக்கவில்லை என்பார்கள். எதிர்க்கட்சிகள் என்றால் இப்படி குறை காண்பது இயற்கைதானே?
கேள்வி: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மீது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ஏ.பி.பரதன் குற்றச்சாட்டு சொல்லுகிறாரே?
பதில்: அவருடைய பேச்சுக்கு, அவருடைய கட்சியைச் சேர்ந்த தமிழக தலைவர்கள் தா.பாண்டியன், ஆர்.நல்லக்கண்ணு போன்றவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
அப்படியா, எழுது உடனே அறிக்கையை..
கேள்வி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாரே?
பதில்: அப்படியா? எழுது உடனே அறிக்கையை! அமெரிக்க அதிபராக இருந்துகொண்டு, அவரே எப்படி நோபல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று காரசாரமாக எழுது! ஓ! அவர் தமிழ்நாட்டில் இல்லையோ? அப்படியானால் விட்டு விடு!
கேள்வி: நோபல் பரிசுக்கு ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்களே?
பதில்: பயங்கரவாத அமைப்பினர் அல்லவா? மற்றவர்களுக்கு பரிசோ, விருதோ கிடைத்தால் அவர்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?
ரஜினி பேச்சு - இலக்கணம்...
கேள்வி: திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த் - ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டர்கள் ஓடி வருவார்கள் என்றும், தலைவன் ஓடினால் தொண்டர்கள் நடந்து வருவார்கள் என்றும், தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்துவிடுவார்கள் என்றும் பேசியது பற்றி?
பதில்: நண்பர் ரஜினியின் பேச்சை; ஒரு கட்சியின் தலைவருக்கும்- தொண்டருக்கும் தேவையான இலக்கணம் எனலாம்.
கேள்வி: உள்ளாட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் வெளிவந்துள்ள முடிவுகள் பற்றி?
பதில்: கட்சி வாரியாக 100 இடங்களில் தேர்தல்கள் நடைபெற்றதில் - தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 71 இடங்களிலும் (தி.மு.க. 50, காங்கிரஸ் 21); அ.தி.மு.க. 17 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 இடத்திலும், ம.தி.மு.க. 3 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
கேள்வி: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்து விட்டதே?
பதில்: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர்களைச் சேர்க்கலாம் என்பது இழுபறியாக இருந்தபோது தமிழக அரசை குறை கூறி எழுதியவர்கள் எல்லாம், தற்போது அனுமதி கிடைத்த பிறகு அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications