பாலம் கட்டுவது திமுக-இடிப்பது அதிமுக: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: திமுக அரசு பாலம் கட்டுகிறது. அதிமுக ஆட்சியில் அது இடிக்கப்படுகிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தென்காசியில் ரயில்வே மேம்பாலம், ஏர்வாடி, ஆசாத் நகர் உள்பட உயர்மட்ட பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் திட்ட விளக்கவுரையாற்றி பேசியதாவது:

தமிழக அரசு தென்னக ரயில்வேயோடு இணைந்து அதிக திட்டங்களை தீட்டி வருகிறது. மேம்பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதி ரூ.30 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அதை ரூ. 120 கோடியாக உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் 130 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் 50 பாலங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. தமிழக அரசு தென்னக ரயில்வேவுக்கு அதிகளவில உதவி வருகிறது. அந்த உதவி இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம் பேசியதாவது:

நீண்ட கால கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. விருதுநகருக்கு அடுத்தபடியாக தென்காசி- செங்கோட்டை முக்கிய நகர்களாக விளங்கி வருகின்றன. அதிக சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாக விளங்குவதாலும், சிவகாசி, ராஜபாளையம் தொழில் நகரங்களாக விளங்குவதாலும் செங்கோட்டை- சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும்.

மக்களுக்குத் தேவையான அளவுக்கு ரயில் போக்குவரத்து இப்பகுதியில் அதிகரிக்கப்பட வேண்டும். செங்கோட்டை- ஈரோடு ரயில் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. அந்த ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும். நெல்லை- தென்காசி, செங்கோட்டை- புனலூர் மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்றும் பணி வேகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மேன்மையடையும் என்றார்.

பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ பேசியதாவது:

தென்காசி நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப பெரிய தொழிற்சாலைகள் அமைக்கும் அளவுக்கு 500 ஏக்கர், 1000 ஏக்கர் நிலம் இங்கு இல்லை. அதனால் பொதுமக்கள் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக இப்பகுதியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தாலுகா அந்தஸ்து பெரும் என்றார்.

கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ பேசியதாவது:

கேட்காமலேயே அதிக திட்டங்களையும், நிதிகளையும் என் குடும்பத் தலைவர் முதல்வர் அள்ளி வழங்கி வருகிறார். எனக்கு அனைத்துமே முதல்வரும், துணை முதல்வரும்தான். பீட்டர் அல்போன்ஸ் சொன்னதுபோல் தென்காசியை தனி் மாவட்டமாக அறிவிக்க வேண்டுகிறேன் என்றார்.

அவர் பேசும்போதே குரல் தழுதழுத்தது. அவரது கண்களும் கலங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவரது ஆதரவாளர்களும் சபாநாயகரின் ஆதரவாளர்களும் அடிதடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டபின் ஏராளமான மேம்பாலங்கள் கட்டபட்டுள்ளன. பெருகிவரும் போக்குவரத்தை கட்டுபடுத்த இத்திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. திமுக ஆட்சியில் கட்டப்படும் பாலங்களை அதி்முக ஆட்சி வந்தபின் ஊழல் நடைபெற்றதாக கூறி இடித்து சோதனை செய்தனர். ஆனால், இதுவரை குறைகள் கண்டறியப்படவில்லை. ஒரு சார்ஜ் சீட் கூட போட முடியவில்லை. பாலங்களை கட்டுவது திமுக ஆட்சி, அதை இடிப்பது அதிமுக ஆட்சி.

சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், மக்களுக்குத் துணையாக, பாலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் என்னை துணை முதல்வராக நியமித்துள்ளார். அந்த பணியினை திறம்பட செய்வேன். இங்கே அண்ணா நூற்றாண்டு விழாவில் ஒரு மாணவன் பேசினான், தேசத்தின் பிதா மகாத்மா, ரேஷனின் பிதா முதல்வர் கலைஞர் என்று கூறி ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் குறித்து பேசினான்.

தமிழகத்தில் 2010ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து மக்களுக்கும் இலவச கலர் டிவி கொடுக்கப்பட்டு விடும் என்றார்.

விழாவில் தென்காசி எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் தழுதழுப்பாக பேசினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் பேசும்போது திமுகவினர் கூச்சல் போட்டனர். முடிவில் பெண்களிடம் மனுக்கள் பெறாமல் விழா முடிவுற்றது. அப்போது பெண்கள் மேடையின் கீழ்பகுதியில் கூச்சல் போடவே அனைவரையும் மேடைக்கு வரவழைத்து ஸ்டாலின் மனுக்களைப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+