ராஜபக்ஷேவுடன் இனித்து பேசி, போஸ் கொடுத்த குழு-விஜய்காந்த்
சென்னை: கருணாநிதி என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை இல்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளது இந்தக் குழு.
இந்தப் பயணம் ராஜபக்ஷேவுக்குத்தான் அனுகூலமாக அமையும். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களே தனக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபக்ஷே இதை பயன்படுத்திக் கொள்வார்.
'இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் இறந்துவிட்டனர். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்' என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்தக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
'பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும்' என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.
எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, அதைச் சீரழித்தவர் கருணாநிதிதான்.
இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.
நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு?. பேராபத்தில் தமிழர்கள் உள்ளபோது, இந்திய அரசு மௌனம் சாதிப்பது, யாருக்காக இந்த அரசு நடைபெறுகிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை, இந்திய- இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
பாஜகவும் கண்டனம்:
இந் நிலையில் பாஜக மூத்த தலைவர் வெங்கைய நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கைத் தமிழர் பிரச்னை திமுக, காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. அது ஒரு தேசிய பிரச்சனை.
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன.
ஆனால் அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் முடிவெடுத்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருப்பது சரியான நடவடிக்கை அல்ல. தமிழகத்தில் உள்ள பாஜக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்புவேன்.
திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. போர் முடிந்து 180 நாள்களுக்குப் பிறகுதான் மறுவாழ்வு பணிகள் பற்றி இலங்கை அதிபர் ராஜபட்ச பேசத் தொடங்கியுள்ளார்.
சுமார் 3 லட்சம் தமிழர்கள் சுகாதாரமற்ற அகதி முகாம்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவால் விடிவுகாலம் பிறக்கப்போவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications