பைக்கில் சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு
திசையன்விளை: கன்னியாகுமரி மாவட்டம் திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்துச் சென்றனர்.
திசையன்விளை அருகேயுள்ள புதியிருப்புவிளையை சேர்நத சுரேஷ் மனைவி சிவமனி, நேற்று மாலை இவர் தனது அண்ணன் பால்சாமியுடன் திசையன்விளையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மணியன்குடி வேதகோயில் தெரு அருகே வரும்போது மின்னல் வேகத்தில் வந்த இருவர் சிவமணியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பால்சாமி அவர்களில் ஒருவனின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனால் நாலு பேரும் கீழே விழுந்தனர்.
உடனே அந்த மர்ம நபர்கள் சிவமணி அணிந்திருந்த 9 பவுன் நகையை திருடிக் கொண்டு ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெகடர் நாகமாணிக்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஏலக்காரரிடம் திருட்டு...
இதுபோல் தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6வது தெருவை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஏலக்காரராக இருந்து வருகிறார். நேற்றிரவு இவர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பூபாலராயர்புரம் 3வது தெருவில் செல்லும்போது ஒரு பைக்கில் வந்த 3 பேர் ஜான்பிரிட்டோ மீது மோதினர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த 3 பேரும் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி ஜான் பிரிட்டோவிடமிருந்து ரூ.1.60 லட்சத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல கொள்ளையன் சிக்கினான்...
இதேபோல, பாளையங்கோட்டை-திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்போன்களை அள்ளி சென்றனர்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முகமது மைதீன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் இருளப்பசாமி, கலைசெல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
கடையில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகையை ஓப்பிட்டு பார்த்ததில் திருச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் பாளையங்கோட்டை கடையில் கொள்ளையடித்ததை ஓப்புக்கொண்டார். மேலும் நெல்லையில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications