விவசாயிகள்: கருணாநிதியை சந்திக்கும் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து விவசாய சங்கத்தினருடன் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து உழவர் வருவாய்க் குழு' அமைக்க வலியுறுத்தப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பசுமைத் தாயகம் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் பேசிய ராமதாஸ்,

அக்டோபர் 3ம் தேதி உழவர்களுக்கான கொள்கையறிக்கை மற்றும் உழவர் வருவாய்க் குழு குறித்த ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டோம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, உழவர் வருவாய்க் குழு அமைக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

முதல்வரை அடுத்த வாரம் கூட சந்திக்கலாம், இப்போது நேரம் கேட்டாலும் கொடுத்து விடுவார். அதில் எல்லாம் பிரச்சனை இல்லை. உங்களுக்கு எல்லாம் வசதியான ஒரு நாளை முடிவு செய்து, 40, 50 விவசாய சங்கத் தலைவர்கள் சேர்ந்து முதல்வரை சந்திப்போம்.

விவசாயிகள் பல சங்கங்களாக பிரிந்து இருந்தாலும் அனைவரும் விவசாயிகளைப் பற்றித் தான் கவலைப்படுகிறோம். இங்கு பிரிவினை இருக்கக் கூடாது, இருக்க முடியாது. இங்கு அரசியல் இருக்கக் கூடாது.

நான் ஒரு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவன் தான் என்றாலும் அதையெல்லாம் விட்டுவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன்.

விவசாயிகள் சேர்ந்து ஒரு கடுமையான போராட்டம் நடத்தினால், இனி விவசாய சங்கங்கள் சேர்ந்து தான் பட்ஜெட்டை போடக்கூடிய நிலை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வர நேரிடும். அந்த அளவு நாம் செய்ய வேண்டும்.

எனவே முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுப்போம். அதற்கு பின்னரும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் அனைவரும் போராட வேண்டிய கால கட்டத்திற்கு காத்திருக்கிறோம் என்றார் ராமதாஸ்.

பி.டி. கத்தரிக்காய்-பிரதமருக்கு அன்புமணி கடிதம்:

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில்,

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு கடந்த 14ம் தேதி மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

கத்தரிக்காய்க்கு உள்ளே ஒரு பாக்டீரியாவின் மரபணுவை செலுத்தி இந்த புதிய பி.டி. கத்தரிக்காயை மஹிகோ நிறுவனம் தயாரித்துள்ளது. அப்போது தான் கத்தரிக்காய் செடிக்குள் ஒரு புதிய நஞ்சு உருவாகும். அந்த நஞ்சு, பயிரைச் சாப்பிடும் குறிப்பிட்ட சில பூச்சிகளைக் கொல்லும்.

உலகின் எந்த ஒரு பகுதியிலும், எந்த மரபணு மாற்றப்பட்ட பயிரும் பயிரிட அனுமதிக்கப்படுவது இல்லை. நம்நாட்டில் 2500க்கும் மேற்பட்ட கத்தரிக்காய் வகைகள் உள்ளன. வளம்மிக்க இந்த பல்வகைப் பண்புதான் உயிரியல் மரபாகும். பி.டி. கத்தரிக்காய் நுழையுமானால் அந்த மரபு சீரழிந்துவிடும்.

ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பாதிப்பு, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு பாதிப்பு போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். பி.டி. கத்தரிக்காயும் அதற்கு விதிவிலக்கல்ல.

இதை அனுமதிப்பதற்கு முன் இந்தியா ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை.

அதிக செலவு ஏற்படுத்தக்கூடிய, உற்பத்தி வளங்களை அழிக்கக்கூடிய, மக்களின் மீதும் பிற உயிரினங்கள் மீதும் நச்சுத்தன்மை பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, விவசாயம் செய்வதையே லாயக்கற்றதாக ஆக்கக்கூடிய, நிலைத்த ஆற்றல் இல்லாத தொழில்நுட்பங்களுக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

பூச்சி தாக்குதலை தடுப்பதற்கு பாதுகாப்பான, செலவு குறைவான, உழவர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மாற்று வழிகள் இருக்கும்போது பி.டி. கத்தரிக்காய்க்கு என்ன அவசியம் என்பது தெளிவாகவில்லை.

பி.டி. கத்தரிக்காய் அனுமதிக்கப்படுமானால், நுகர்வோர் தாங்கள் சாப்பிடுவது பி.டி. கத்தரிக்காயா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்குக் கூட எந்த வழியும் இல்லை. சந்தையில் எல்லா கத்தரிக்காய்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். இது நுகர்வோருக்குள்ள உரிமையை மீறுவதாகும்.

வேளாண்மையின் மீது மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், இத்தகைய பயிர்களை அறிமுகப்படுத்துவதை கேரளம், ஒரிஸ்ஸா ஆகிய மாநில அரசுகள் விரும்பவில்லை என்ற நிலையில், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட அதிகாரத்தை மீறுகின்ற எந்த நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்கக் கூடாது.

உலகம் முழுவதும் அதிக நாடுகள் மரபணு மாற்றுப் பயிர்களை தடை செய்து வருகின்றன என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் அன்புமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+