ஒரு நாடகமன்றோ நடக்குது...!!-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை,: மத்திய அமைச்சரவையில் திமுக இருந்து கொண்டே ஒரு மத்திய அமைச்சரை எதிர்த்து கண்டன கூட்டம் நடத்தும் முதல்வர் கருணாநிதியின் நாடகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை கேரளா மேற்கொள்ளக் காரணமான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

10 நாட்களுக்கு முன், ஆய்வுப் பணியை மேற்கொள்ள மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்தபோதே, “கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு தேவைப்படும் முன் நிபந்தனை தான் இந்த ஆய்வு என்பதை எடுத்துரைத்து, இதன் அடிப்படையில் கேரள அரசு மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணியை தடை செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை" என்றும், “எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு" என்றும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

தமிழ்நாட்டின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்ததற்கான காரணங்களில் இது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரள அரசு மேற்கொள்ளும் ஆய்வுப் பணியை தடை செய்வதற்குத் தேவையான முழுமையான விவரங்களை தமிழக அரசு அளிக்கத் தவறி விட்டது என உச்ச நீதிமன்றமும் குற்றம் சாட்டியுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழக அரசு முழு மனதுடன் உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை எடுத்துரைக்கவில்லை.

தற்போது, மத்திய அரசின் அனுமதியுடன் கேரள அரசு நடத்தி வரும் ஆய்விற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுப் பணியை கேரள அரசு தொடரும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்த திமுக அரசு எதையும் செய்யவில்லை.

கேரள அரசு புதிய அணையை கட்டினால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு வரும் தண்ணீர் நின்று போய் விடும். இதன் விளைவாக, மேற்படி மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். லட்சக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படும்.

“முல்லைப் பெரியாறு பிரச்சினையை ஜெயலலிதா பெரிதுபடுத்துவதால், கருணாநிதிக்கு குரல் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை" என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கருணாநிதிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

அதே சமயத்தில், என்மீது கேரள முதல்வர் வசைமாரிப் பொழிந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், கேரளாவின் வாதத்தை முன்வைக்கின்ற முக்கியமான இந்தத் தருணத்தில், என்மீது தனிப்பட்ட முறையில் அச்சுதானந்தன் வசைமாரிப் பொழிவதை பார்க்கும் போது, “வாதம் பலவீனமாக இருக்கும்போது, மேசையை பலமாக ஓங்கித் தட்டு" என்ற பழமொழியை கேரள முதல்வர் பின்பற்றுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தற்போது முல்லைப் பெரியாறு பகுதியில் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு அனுமதி வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சரை கண்டித்து மதுரையில் வரும் 1ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

இலங்கைக்காக பல்வேறு கண்துடைப்பு நாடகங்களை நடத்தி, அந்தப் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்தார். தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் இதே போன்ற நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறார். மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு இதுபோன்ற நாடகங்களை கருணாநிதி நடத்துவது மக்களை ஏமாற்றும் முயற்சி.

திமுக அரசில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு எதிராக இது போன்ற கண்டனக் கூட்டத்தை கருணாநிதி நடத்துவாரா?.

மத்திய அமைச்சரவையில் திமுக இருந்து கொண்டே ஒரு மத்திய அமைச்சரை எதிர்த்து கண்டன கூட்டம் என்று இது போன்ற நாடகங்களை கருணாநிதி நடத்துவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

உண்மையிலேயே முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கருணாநிதியை ஏமாற்றி விட்டது என்பதை தமிழக மக்கள் நம்ப வேண்டுமானால், மத்திய அரசுக்கு திமுக கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+