எஸ்.எஸ்.சந்திரன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தூத்துக்குடி: தமிழக முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோரது முன் ஜாமீன் மனுக்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூரில் அதிமுக சார்பில் அக்டோபர் 20ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், மாவட்டச் செயலர் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியையும், முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணனையும், அவர்களது குடும்பத்தாரையும் அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக இருவர் மீதும் திருச்செந்தூர் போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் எஸ்.பி.சண்முகநாதன் ஆகிய இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.எஸ்.ஆவடி தியாகராஜமூர்த்தி முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெபராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன், சன்முகநாதன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
