For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனமழை: நீலகிரியில் 39 பேர் பலி- 'ஊட்டிக்கு வரவேண்டாம்'

Google Oneindia Tamil News

Ooty
ஊட்டி: ஊட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வேண்டாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் ஆனந்த் பாட்டில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் பெய்த கன பலத்த மழையால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் சரிந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை சீர் செய்ய சில நாட்கள் ஆகும்.

இதனால் போக்குவரத்து அனைத்தும் கோத்தகிரி சாலை வழியாகத்தான் நடந்து வருகிறது. அவசர உதவிகளுக்கு மஞ்சூர், கெத்தை, காரமடை சாலையை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

நிலச்சரிவு பலி 39 ஆனது:

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் கன மழையாலும், நிலச் சரிவுகளாலும் வீடுகள் இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு இடங்களில் இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

மலை ரயில் போக்குவரத்து ரத்து:

ஊட்டி மலை ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து கடந்த இரு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு:

நீலகிரிக்கு செல்லும் பர்லியாறு பாதை துண்டிக்கப்பட்டது. இன்று கோத்தகிரி சாலையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டி-பழனிச்சாமி விரைந்தனர்:

இந் நிலையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமும், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் ஊட்டி விரைந்துள்ளர்.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை:

இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, பெருமழை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி இன்று முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர், நிதித்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள், வருவாய்த்துறை ஆணையர், சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி, புலனாய்வுத்துறை ஐ.ஜி. ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

இதில் தற்போது அங்கே எடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இருந்து உயர் அதிகாரிகள் சிலரை நீலகிரி மாவட்டத்திற்கு சென்று நிவாரண பணிகளை மேற்பார்வையிட அனுப்புமாறு வருவாய்த்துறை ஆணையரிடம் முதல்வர் உத்தரவிட்டார்.

தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவத் துறை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் சார்பில் போதுமான அளவிற்கு அலுவலர்களையும், பணியாளர்களையும் அங்கே அனுப்பவும் அவர் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மண்ணெண்ணை, உடைகள் உடனடியாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X