அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரவி வந்த தகவல்கள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் தனக்கு உரிய அங்கீகாரமும், பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து '4 சீனியர்கள்' ஓரம் கட்டிவிட்டதாக கூறினார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய நிலையில், அரசியல் ஆர்வம் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். 2020 ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தமிழக பாஜக துணைத் தலைவராக உயர்ந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தமிழக பாஜக அரசியல் ரீதியாக கொஞ்சம் முன்னேறியது. "என் மண் என் மக்கள்" பயணம், திமுக அரசை எதிர்த்து தொடர்ந்து முன்வைத்த விமர்சனங்கள் உள்ளிட்ட காரணங்களால் அண்ணாமலை இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அண்ணாமலை
குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனி அணியாக போட்டியிட்டு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றது அண்ணாமலையின் அரசியல் திறனை வெளிப்படுத்திய நிகழ்வாக பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடந்த அரசியல் மாற்றங்கள் அவரது அரசியல் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவானது.
நயினார் நாகேந்திரன்
இந்த கூட்டணியை சுமூகமாக நடத்த வேண்டும் என்ற காரணத்தால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பொறுப்பேற்றார். இதன்பிறகு அண்ணாமலை கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபடவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடாமல் விலகி இருந்தார்.
மத்திய அமைச்சர் பதவி
தேர்தல் முடிந்த பிறகும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி, மத்திய அமைச்சர் பதவி அல்லது தேசிய அளவிலான பொறுப்பு ஏதேனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில்தான், சமீபத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தும் விவகாரத்தில் அண்ணாமலை வெளிப்படையாக கருத்து தெரிவித்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டதால், கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது.
டெல்லி சந்திப்பு
இதற்கிடையில், அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்ததாகவும், அப்போது ஐந்து பக்க கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழக பாஜகவில் தன்னை புறக்கணித்ததாகவும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விரிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அண்ணாமலை புதிய அரசியல் பாதையை தேர்வு செய்யும் எண்ணத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக அவர் சமூக சேவை மற்றும் இளைஞர் இயக்கங்களை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலை தனிக்கட்சி
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் தமிழக அரசியலில் இன்னும் சில மாற்றங்கள் உருவாகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே விஜய் தலைமையிலான அரசியல் எழுச்சி இளைஞர் வாக்காளர்களை கவர்ந்துள்ள நிலையில், அதே அடித்தளத்தை குறிவைத்து அண்ணாமலையும் களமிறங்கினால் அரசியல் போட்டி மேலும் தீவிரமாகும் என மதிப்பிடப்படுகிறது. எனினும், அண்ணாமலை உண்மையிலேயே பாஜகவில் இருந்து விலகிவிட்டாரா, அல்லது அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக மேலிடம் இறங்குமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை,
மீண்டும் தலைவர் பதவி
இந்நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் மாநிலத் தலைவர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்குவது போன்றவை குறித்து பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications