ராஜபக்சேவை சந்தித்தார் பிரணாப் - பேச்சு
கொழும்பு: இலங்கை சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.
இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் இந்தியா தனக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்று அதிபர் ராஜபக்சே ரகசிய கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் ராணுவத் தளபதி பொன்சேகா கூறியதும், பொன்சேகா உடனடியாக ராணுவ தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அவர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். சர்வதேச பொருளாதார நிலை, நிதி நெருக்கடி உள்ளிட் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசியதாக அதிபர் அலுவலக பணியாளர் ஒருவர் கூறினார்.
இருப்பினும் தமிழர் நலன் குறித்து இருவரும் பேசினார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வாக எந்தத் தகவலும் இல்லை.
முன்னதாக கொழும்பில் நேற்று, இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரணாப் பேசியதாவது...
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சனையில் அனைவருக்கும் நன்மை தரும் வகையில் அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும். இதில் எந்த ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மத, இன வேறுபாடு எந்த இடத்திலும் தலைதூக்கக் கூடாது.
இலங்கையில் போரில் ராணுவம் வெற்றி பெற்றிருந்தாலும், அரசியல் ரீதியாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மிகப்பெரிய வெற்றியாக அமையும். அரசியல் சாசன சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வும், சம அந்தஸ்து மற்றும் சம உரிமை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
சட்டம், சமூகநீதி, மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் போன்றவை நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு அனைவருக்கும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறை இடைவெளியும் குறைந்துள்ளது என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.












Click it and Unblock the Notifications