மது கடத்திய பிளஸ் டூ மாணவன் கைது
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மது பாட்டில்களை கடத்திய பிளஸ் டூ மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் வாகனங்களில் போலி மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, கலால் துறை ஆணையரான கலெக்டர் ராகேஷ் சந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி துணை ஆணையர் அன்பழகன், துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் கலால் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, உறுவையாறு பாலத்திலிருந்து வில்லியனூர் நோக்கிச் சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 80 அட்டை பெட்டிகளில் 180 மி.லி போலி மது பாட்டில்கள், தமிழக பகுதியில் விற்பனை செய்ய கடத்தப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என தெரிகிறது. மினி லாரி டிரைவர் உட்பட இரண்டு பேரை போலிசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், இவர்கள் மூவரும் நெல்லித்தோப்பு வினோபா வீதியைச் சேர்ந்த அருள்மொழிவர்மன்(40), உருளையன்பேட்டை முருகன் கோவில் தெரு மூர்த்தி(40), ஆரோக்கியநாதன் (20) என்பது தெரிய வந்தது. இவர்களில், ஆரோக்கியநாதன் பிளஸ் 2 படித்து வருகின்றார்.
மதுபாட்டில் கடத்தலில் கைதான மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலி மது பாட்டில் தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான பூமியான்பேட்டை முகிலனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications