கரும்பு விலை நிர்ணயம்-மத்திய அரசுக்கு திமுக எதி்ர்ப்பு!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை குறி வைத்து எதிர்க்கட்சியினர் பாயலாம் எனத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை திமுகவுக்கு முழு அளவில் காங்கிரஸ் ஆதரவாக நடந்து வருவதாக கூற முடியாது. காரணம், சமீபத்தில் ராசாவின் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. மதுரையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் இந்த ரெய்டு நடந்தது.
பின்னர் ஜெயராம் ரமேஷுக்கு எதிரான போர்க்கொடியை திமுக கீழே இறக்கி விட்டது. சிபிஐ தரப்பிலும் தற்போது அமைதி காணப்படுகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக்கும் எனத் தெரிகிறது.
ராஜ்யசபாவில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையைக் கிளப்பி அவையை ஸ்தம்பிக்க வைக்க அதிமுகவும் தயாராகி வருகிறது.
இதையடுத்து ஸ்பெக்ட்ரம் தாக்குதலை சமாளிக்க சில வித்தியாசமான உத்திகளை திமுக வகுத்திருப்பதாக தெரிகிறது.
அதாவது ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பெரிதாக கிளப்பப்பட்டு மத்திய அரசு தரப்பிலோ அல்லது காங்கிரஸ் தரப்பிலோ அதை சமாளிக்க உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாவிட்டால் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து வேறு பிரச்சனைகளில் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க திமுக தயாராகி விட்டதாம்.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம், ஈழத் தமிழர் பிரச்சனை உள்ளிட்டவற்றில் எதிர்க்கட்சியினருடன் இணைந்து காங்கிரஸுக்கு நெருக்கடி தரவும் திமுக தயாராகி விட்டதாம்.
முன்னோட்டமாக கரும்புக்கான விலை நிர்ணயக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு திமுக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கரும்பு விலை நிர்ணயத்தை அனைத்து எதிர்க்கட்சிகளுமே எதிர்த்து வருகின்றன. இதை மையமாக வைத்து நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப அவை தயாராகி வருகின்றன. அவர்களுடன் தன்னையம் இணைத்துக் கொள்ளவுள்ளது திமுக.
இதுகுறித்து திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரும்பு விலை நிர்ணய சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான, முறையான விவாதம் நடந்தால் அதில் திமுக பங்கேற்கும். எங்களது உணர்வுகளை அப்போது தெரிவிப்போம். இந்த விலை நிர்ணயம் குறித்த முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு முன்பு மாநில அரசுகளுடன் அது கலந்து ஆலோசிக்கவில்லை.
மத்திய அரசின் முடிவால், மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். எனவே இது நியாயமற்றது என்றார்.
மேலும், நாடாளுமன்றம் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பின்னர் டி.ஆர்.பாலு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து இதுதொடர்பாக விவாதித்தார். அப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசாவும் உடன் இரு்நதார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபாவில் திமுகவுக்கு தற்போது 18 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அவசர ஆலோசனை:
இந் நிலையில் கரும்பு விலை நிர்ணயச் சட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகள் மத்தியிலேயே எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளான இன்று கரும்பு விலை தொடர்பாக ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் லோக்சபா ஒத்திவைக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.
இதையடுத்து கரும்பு விலை பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சரத் பவார், வீரப்ப மொய்லி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications