சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு-ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்..

சென்னை, லாயிட்ஸ் சாலையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?

ஜெயலலிதா: இடைத் தேர்தல்களில் அதிமுக போட்டியிடும்.

கேள்வி: கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட என்ன காரணம்?

ஜெயலலிதா: கடந்த முறை 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது அந்த தொகுதிகளை அதிமுக புறக்கணித்தது. நிரந்தரமாக இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணிக்கும் என்று எந்த காலகட்டத்திலும் நான் சொல்லவில்லை. அந்த காலக்கட்டத்தில் தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த தேர்தல்களை புறக்கணித்தோம். இனி நடைபெறும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுவோம். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டது.

கேள்வி: அதிமுகவுடன் புதிய கட்சிகள் கூட்டணி சேர உள்ளதா?

ஜெயலலிதா: தற்போது அதுபற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.

கேள்வி: மத்திய அமைச்சர் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதத்திற்கு ஏதாவது பதில் வந்ததா?

ஜெயலலிதா: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வெளியாகியுள்ள பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இப்பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதிக்கிறது. எனது கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

எங்கள் கட்சி எம்.பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு அவைகளிலும் பிரச்சனையை கிளப்ப இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். குறிப்பாக இதனால் ஆதாயம் பெற்றது யார்? என்பதை தெரியப்படுத்த வேண்டும். சிபிஐ விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்றால் ராசா அமைச்சர் பதவிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

கேள்வி: இலங்கை பிரச்சனையை இந்தியா எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையில், இந்தியா ஏற்கனவே உருப்படியான முறையில் செயலாற்றி இருக்க வேண்டும். தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பங்காற்றுவதற்கான வாய்ப்பு தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு இருந்து வந்தது. ஆனால் அதை இந்தியா சரியாக செய்யவில்லை.

அதுமட்டுமல்ல, தமிழர்களை அழித்து ஒழிப்பதற்கு இலங்கை அரசுக்கு, இந்தியா துணை நின்றது. இப்போதாவது நிலைமைகளை உணர்ந்துகொண்டு தான் செய்ததற்கு பிராயசித்தம் செய்யவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள், ஹிட்லர் காலத்தில் நாஜி படைகளால் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம்களைப் போலவே உள்ளன. முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்படவும், அவரவர் சொந்த இடங்களில், சுய நிர்ணய உரிமையோடு வாழவும் உதவ வேண்டும்.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து?

ஜெயலலிதா- இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசுதான். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

இலங்கை அகதிகளுக்கு உதவுவதற்காக தமிழக அரசு இப்போது ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது மிகவும் காலம் கடந்த முடிவு. இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். இப்போது திடீரென அவ்வாறு முடிவெடுத்திருப்பது, திமுக அரசின் சந்தர்ப்பவாத நடவடிக்கை ஆகும் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக பல்வேறு கட்சிகளிலிருந்து பலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசுகையில்,

பல்வேறு கட்சிகளில் இருந்து எத்தகைய நம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் அதிமுகவில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது.

உங்கள் திறமைகளை அதிமுக முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். சிறுபான்மை இன மக்கள், குறிப்பாக பெண்கள் அதிமுகவில் இணைவதைப் பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சிறுபான்மையினருக்கு அதிமுக மதிப்பளிக்கிறது. அதிமுக ஆட்சியில் உங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது. வரும் காலங்களிலும் பாதுகாப்பு வழங்கப்படும்.

எத்தகைய மதிப்பும், பாதுகாப்பும் வேண்டி இந்தக் கட்சியில் இணைந்தீர்களோ, அந்த பாதுகாப்பை இந்த கட்சி உங்களுக்கு அளிக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+