காலையில் ரூ 96 அதிகரித்து மாலையில் ரூ 272 குறைந்த தங்கம்!

காலையில் பவுனுக்கு ரூ.96 அதிகரித்த தங்கத்தின் விலை, மாலையில் பவுனுக்கு 272 ரூபாய் குறைந்தது.
துபாய் நாட்டில் அரசு முதலீட்டு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் முதலீடு செய்துள்ள உலக நிறுவனங்கள் ஆடிப்போய் உள்ளன. பங்குச் சந்தை கடந்த இரு தினங்களாக பெரும் சரிவைக் கண்டது.
ரூ.80 லட்சம் கோடி அளவிலான வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாதம் தவணை கோரப்பட்டுள்ளதால், துபாய் நிதிச்சந்தை திவாலாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
துபாய் நிதி நெருக்கடி, இந்தியாவில் தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், காலையில் உயர்ந்த தங்கம் விலை, மாலையில் சரேலெனக் குறைந்தது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.13,368-க்கு விற்பனையானது. நேற்று காலையில் திடீர் என்று பவுனுக்கு ரூ.96 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.13,464 ஆக உயர்ந்தது. நேற்று மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு பவுன் ரூ.13,192-க்கு விற்பனையானது.
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் வரத்து சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்த விலைக் குறைவு என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
