நகராட்சிக் கூட்டத்தில் திமுகவினர் ரகளை - செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த நகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர் நாற்காலிகள், மைக்குகளை உடைத்து விளையாடினர். காங்கிரஸ் கவுன்சிலர் தனது செருப்பை எடுத்து தன்னைத் தானே சரமாரியாக அடித்தபடி வெளியேறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி கூட்டம் மன்ற நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவி பவுஜியா பேகம் தலைமை தாங்கினார்.
குடிநீர் முதல் எந்தப் பிரச்சினையையும் நகராட்சி தீர்க்கவில்லை என்று குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் பேசினார். அவர் பேசுகையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் அஜெண்டாவில் அவர் பெயரை போடவில்லையே, இதற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றார்.
அவருக்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் பவுஜியா, பெயர் விடுபட்டதற்காக வருந்துவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜியாவுதீன், குடிநீர்பிரச்சினை முதல் எந்த பிரச்சினையையும் நகராட்சி தீர்க்கவில்லை. நகராட்சி நிர்வாக திறமையின்மையால் எனது செருப்பை எடுத்து நானே அடித்துக் கொள்ள வேண்டியது தான் என்று கூறி, தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி தன் தலையில் அடித்துக்கொண்டார்.
பின்னர் அவர் நாற்காலியை தூக்கி உடைத்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர் அமிர்தலிங்கம், அமுதவள்ளி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து எழுந்த திமுக கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன், மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாத உங்களுக்கு ஏன் இந்த தலைவி பதவி? அந்த பதவியை நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் பிரச்சினையை தீர்க்கும் வரை கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என்றார்.
இதையடுத்து தலைவருக்கு ஆதரவாக சிபிஎம் கவுன்சிலர் சந்திரசேகரன் எழுந்தார். ஆனால் அவரை பேச விடாமல் திமுக கவுன்சில்கள் தடுத்தனர் - அதையடுத்து ரகளை ஆரம்பமாகியது.
திமுக கவுன்சிலர்கள் சந்திரசேகரனை சூழ்ந்து கொண்டு பேச விடாமல் தடுத்தனர். நாற்காலிகளை தூக்கிப் போட்டு உடைத்தனர். அஜென்டா புத்தகத்தை கிழித்தெறிந்தனர். மைக்குகளைப் பிடுங்கி உடைத்தெறிந்தனர்.
அதன் பின்னர் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக, சிபிஎம் இதில் பங்கேற்கவில்லை.
இருப்பினும் பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி விட்டதால் கூட்டத்தை ஒத்திவைத்தார் தலைவர் பவுஜியா பேகம்.












Click it and Unblock the Notifications