பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர் போராட்டம்
நெல்லிக்குப்பம்: பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்காததை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று ஆசிரியர்கள் உள்ளனர்.
மேலும், 6, 7ம் வகுப்புகளில் உள்ள 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றார். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் சங்க கூட்டத்தில், உடனடியாக கூடுதல் ஆசிரியர் நியமிக்காவிட்டால், டிசம்பர் முதல் தேதி பள்ளியை பூட்ட முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் ஆசிரியரை மாவட்ட நிர்வாகம் நியமிக்காததால், ஆவேசமடைந்த பெற்றோர்கள் வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியே அழைத்து வந்து பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
மேலும், பள்ளியில் இருந்த நான்கு ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களை சிறை வைத்தனர். இது பற்றி தகவலறிந்த உதவி தொடக்க கல்வி அலுவலர் வெங்கடாசலம் விரைந்து வந்தார்.
விரைவில் கூடுதல் ஆசிரியரை நியமிப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து, ஆசிரியர்களையும், சத்துணவு ஊழியர்களையும் பெற்றோர் விடுதலை செய்தனர்.












Click it and Unblock the Notifications