செம்மொழி மாநாட்டுக்குப் பூங்கா - கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது

இதனால் கோவை சிறைச்சாலை நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. இத்தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் கோவை ரெல்பீல்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி மாநாடு சிறப்பு அலுவலர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவை குறித்து அண்மையில் தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெறப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ஏறத்தாழ ரூ.300 கோடிக்கு கட்டமைப்பு வசதிகள் கோவையில் மேம்படுத்தப்படும். முதல்வரின் உத்தரவைப் பெற்று இப் பணிகள் உடனடியாகத் துவங்கப்படும்.
சிறைவளாகத்தில் செம்மொழி மாநாட்டுப் பூங்கா...
மாநாட்டின் நினைவாக கோவை மத்திய சிறை இருக்கும் பகுதியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 165 ஏக்கரில் இருக்கும் சிறை வளாகத்தில் 93 ஏக்கர் காலியிடமாக உள்ளது. முதல்கட்டமாக இப் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் உடனடியாகத் துவங்கப்படும். அதன்பிறகு படிப்படியாக புறநகரப் பகுதிக்கு சிறை மாற்றப்படும்.
சிறை அமைப்பதற்கு ஏற்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வில் இருக்கிறது.
சிறை வளாகத்தை முழுமையாக மாற்றிய பிறகு 165 ஏக்கரிலும் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.
இப் பூங்காவிற்கு செம்மொழி மாநாட்டுப் பூங்கா எனப் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கும்போதே அருகே உள்ள காந்திபுரம் பஸ் நிலையமும் விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications