மீன்பிடி சட்ட மசோதா நிறுத்தி வைப்பு-கருணாநிதி கோரிக்கையை ஏற்றார் பவார்
டெல்லி: தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மீன்பிடி சட்ட மசோதாவை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் உறுதி அளித்துள்ளார்.
கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கடல் மீன்பிடி தொழில் வரைவு மசோதாவை, மத்திய அரசு தாக்கல் செய்ய இருந்தது.
அதில், கரையில் இருந்து 12 கடல் மைல் தூரத்துக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும், ரூ.10,000 மதிப்புள்ள மீன்களைத்தான் பிடிக்க வேண்டும். இதை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும், மீனவர்களுக்கு 3 ஆண்டுசிறை தண்டனை மற்றும் ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இலங்கைக்கு அருகே உள்ள தமிழகத்தில் இந்த மசோதாவுக்கு தமிழக மீனவர்கள் இடையே கடும் எதி்ர்ப்பு எழுந்தது.
இதையடுத்து சரத் பவாருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதில் மீன்பிடி சட்ட மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். இது குறித்து கடலோர மாநிலங்களுடன் முழுமையாக ஆலோசனை நடத்திய பின்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சரத் பவாரை நேரில் சந்தித்தும் கருணாநிதியின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய தயாநிதி, தமிழக முதல்வரின் கோரிக்கைபடி, கடல் மீன்பிடி ஒழுங்கு முறை மசோதாவை, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்ய மாட்டோம்., இந்த மசோதா பற்றி அனைத்து முதல்வர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளின் கருத்து கேட்கப்படும் என்று சரத் பவார் உறுதி அளித்தார் என்றார்.
மீனவர்களுக்காக போராடும் கருணாநிதி-கனிமொழி:
இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், வடக்கு மாறந்தலை, தெற்கு மாறந்தலை, வெள்ளக்கோவில், குரும்பூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரம் செய்த திமுக எம்பி கனிமொழி கூறுகையில்,
மத்திய அரசின் மீன்பிடி மசோதா பற்றி அறிந்த உடனேயே முதல்வர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அந்த மசோதாவை ரத்து செய்யும்படி பிரதமர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
பின்னர் தான் இந்த சட்டத்தை எதிர்த்து மீனவர்கள், பேரணி நடத்த தொடங்கினர். இப்படி, மீனவர்கள் கேட்காமலேயே அவர்கள் கோரிக்கைக்காக போராடி வருபவர் கருணாநிதி என்றார்.
சிபிஐ போராட்டம்:
இந் நிலையில் மீனவர்களின் தொழிலுக்கு கேடு விளைவிக்க கூடிய மசோதாவை மத்திய அரசு கைவிட கோரி தமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17, 18ம் தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications