திமுகவை கருணாநிதி நாசப்படுத்திவிட்டார்-வைகோ
திருச்செந்தூர்: அறிஞர் அண்ணா காலத்தில் திமுகவில் பெட்டிக்கடைக்காரர், டீ கடைக்காரர் கூட எம்எல்ஏ ஆகலாம். ஆனால், இன்று திமுகவில் பணக்காரர் மட்டுமே எம்எல்ஏ ஆக முடியும். அந்த அளவுக்கு கட்சியை கருணாநிதி நாசப்படுத்திவிட்டார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்செந்தூர் அதிமுக வேட்பாளர் அம்மன் டி. நாராயணனை ஆதரித்து குலசேகரன்பட்டணம், மணப்பாடு, உடன்குடி, தேரியூர் ஆகிய இடங்களில் வைகோ பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது
திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தொகுதி முழுக்க ஒரு ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்து வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.
வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல் தேர்தல் கமிஷன் செயலற்று போய்விட்டது. போலீஸ் உதவியோடு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
அறிஞர் அண்ணா காலத்தில் திமுகவில் பெட்டிக்கடைக்காரர், டீ கடைக்காரர் கூட எம்எல்ஏ ஆகலாம். ஆனால், இன்று திமுகவில் பணக்காரர் மட்டுமே எம்எல்ஏ ஆக முடியும். அந்த அளவுக்கு கட்சியை கருணாநிதி நாசப்படுத்திவிட்டார் என்றார்.
ஜெ. பயண திட்டம்-வழக்கம்போல் மாற்றம்:
எதிலுமே ஒரு நிலையான முடிவை எடுக்காமல் தவிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கம்போல் தனது இடைத் தேர்தல் பிரச்சார பயணத் திட்டத்தையும் மாற்றியுள்ளார்.
அதன்படி 12 மற்றும் 13ம் தேதிகளில் திருச்செந்தூர் தொகுதியிலும், 15 மற்றும் 16ம் தேதிகளில் வந்தவாசி தொகுதியிலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தனி விமானம் தான்:
இதற்காக இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்செந்தூர் கோயில் பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது. பினனர் ஆறுமுகநேரியில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கினார்.
திமுக-அதிமுக மோதல்: குப்தா அறிக்கை:
இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதியில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிக்கை அனுப்பியுள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து, தகராறு பற்றிய விவரங்களை குப்தா கேட்டுப் பெற்றார்.
அந்த விவரங்களை தொகுத்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்குமாம்.












Click it and Unblock the Notifications