அக்ரம் மனைவிக்கு சிகிச்சை அளிக்க தவறிய 17 டாக்டர்கள் லைசென்ஸ் ரத்து!
இஸ்லாமாபாத்: வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா சிகிச்சைக்காக வந்தபோது முறையான மருத்துவ நடவடிக்கை எடுக்கத் தவறியதாக 17 டாக்டர்களை சஸ்பெண்ட செய்ததோடு, அவர்களின் லைசென்ஸையும் பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஹூமா உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே ஹூமாவுக்கு லாகூரி்ல் 2முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லாகூர் மருத்துவர்கள் ஹூமாவை சரியாக கவனிக்கவில்லை என்ற அதிருப்தி வாசிம் குடும்பத்தினர் மத்தியில் இருந்தது.
மருத்துவர்களின் மெத்தனத்தால் தான் தன் மனைவி இறக்க நேரிட்டது என வாசிம் அக்ரம் குற்றம்சாட்டி இருந்தார். லாகூர் டாக்டர்கள் முழுமையான பரிசோதனை செய்யாமலேயே சிங்கப்பூருக்கு கொண்டு செல்லுங்கள் என நிர்பந்தப்படுத்தியது தான் பிரச்சனையாகிவிட்டது என்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் வாசிம் தனிப்பட்ட முறையில் வருத்தத்தோடு கூறியிருந்தார்.
இதையடுத்து, ஹூமாவுக்கு லாகூரில் 2 மருத்துவமனைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த மாதம் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் யூசுப் ராஸா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை அறிக்கை தேசிய சபையின் சுகாதாரத் துறைக்கான நிலைக் குழு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை அடிப்படையில், சம்பந்தப்பட்ட 17 டாக்டர்களின் மருத்துவ பயிற்சி உரிமங்களையும் ரத்து செய்வது என நிலைக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அவர்களை பணியில் இருந்து தற்காலிகமாக நீ்க்கவும் உத்தரவிடப்பட்டது.
'அந்த மருத்துவர்களை பழிவாங்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. ஹூமாவுக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்' என்று வாசிம அக்ரம் கூறினார்.












Click it and Unblock the Notifications