திசை மாறுகிறது 'வார்ட்' புயல்-தமிழகம் தப்புமா?!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு 'வார்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 'வார்ட்' புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வந்தது.
இந் நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி அது வடக்கு திசையில் நகர ஆரம்பித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அது தமிழகத்தை தாக்காது என்று கருதப்படுவதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை மைய அதிகாரி ரமணன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், வார்டு புயல் வடக்கு திசையில் நகரக்கூடும் என்று செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதால், தமிழகத்திற்கு ஆபத்து இருக்காது.
ஆனால், கணினி அடிப்படையிலான முடிவின்படி பார்த்தால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முழுமையாக நீங்கவில்லை.
அப்படியே புயல் அபாயம் நீங்கினாலும் தமிழகத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றார்.
இந்த புயல் சின்னத்தால் வங்கக் கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் சுழல் காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளன.
சென்னை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கடலூர், புதுவை கடலில் சீற்றம் அதிகமாக உள்ளது. அலைகள் பல மடங்கு உயரமாக எழுவதால் கடலோரங்களுக்குச் செல்ல வேண்டாம் என பொது மக்களை மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.
சென்னையில் மெரீனாவில் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுவதால் கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நாகை, புதுவை, கடலூர், ராமேஸ்வரத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications